அரியலூர் பட்டாசு ஆலை தீ விபத்து.! பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு.!
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே வெற்றியூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் முதற்கட்டமாக 3 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன. இதில் தீ காயமடைந்த பலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது வரை பட்டாசு ஆலை தீ விபத்தில் 10 பேர் பலியாகி உள்ளனர். அதில் 3 பேர் பெண்கள் எனவும் , ஒருவரது உடல் பாகங்கள் சிதறி கிடப்பதால், அந்த உடல் ஆணா பெண்ணா என தெரியவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு அரியலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பளார் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
சுமார் 3 மணிநேரமாக தீ விபத்து பட்டாசு ஆலையில் நீடித்துள்ளது. அதனை அணைக்க தீயணைப்பு துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் 9 இரு சக்கர வாகனங்கள், ஒரு டிராக்டர், ஒரு சரக்கு வாகனம் ஆகியவை முற்றிலும் சேதமடைந்து விட்டது.
படுகாயமடைந்தோர் அரியலூர் அரசு மருத்துவமனையிலும், தீவிர சிகிச்சைக்காக 5 பேர் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து நடைபெற்ற பட்டாசு ஆலையின் உரிமையாளர் ராஜேந்திரனை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.