New Zealand vs Netherlands: இன்று 6வது லீக் போட்டி.. நியூசிலாந்தை எதிர்கொள்கிறது நெதர்லாந்து!
ஐசிசியின் ஒருநாள் உலக்கோப்பை தொடரின் முதல் லீக் போட்டி கடந்த 30ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியுடன் தொடங்கியது. உலகக்கோப்பை தொடரின் தற்போது வரை 5வது லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இன்று 6வது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
ஏற்கனவே நடைபெற்ற முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை நியூசிலாந்து அணி பதிவு செய்தது. இதுபோன்று, லீக் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் நெதர்லாந்து அணி தோல்வியை சந்தித்தது. இந்த சுழலில் இன்று நடைபெறும் 6வது லீக் போட்டியில் நியூசிலாந்து – நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.
நெதர்லாந்து அணிக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் போட்டியிலும் கேன் வில்லியம்சன் விளையாடவில்லை என்பதால் டாம் லேத்தம் கேப்டனாக செயல்பட்டார்.
இன்றைய போட்டி ஹைதராபாத்தில் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானம் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சுக்கு சாதகமான பிட்சாகவும், அதிலும், குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இதனிடையே, நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் ஒருநாள் போட்டியில் 4 முறை நேருக்கு நேர் மோதி உள்ளது. இதில், நியூசிலாந்து அணியே அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது. எனவே, ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி நெதர்லாந்துக்கு எதிரான ஐந்தாவது வெற்றியை எதிர்பார்க்கிறது.
நெதர்லாந்தும் நியூசிலாந்தும் உலகக் கோப்பையில் ஒருமுறை மட்டுமே மோதியுள்ளன. இப்போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியானது கடந்த 1996ம் ஆண்டில் நடந்தது. இது நெதர்லாந்தின் முதல் உலகக் கோப்பை போட்டியாக அமைந்தது. இருப்பினும், கடந்த போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து அணி விளையாடிய விதத்தை பார்த்தால் இன்றைய போட்டி சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்து அணி உத்தேச லெவன் : டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம் (சி & டபிள்யூ), க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, டிரெண்ட் போல்ட் ஆகியோர் உள்ளனர்.
நெதர்லாந்து அணியின் உத்தேச லெவன்: விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடோவ்ட், கொலின் அக்கர்மேன், ஸ்காட் எட்வர்ட்ஸ் (w/c), பாஸ் டி லீடே, தேஜா நிடமானுரு, சாகிப் சுல்பிகர், லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தட், பால் வான் மீகெரென் ஆகியோர் உள்ளனர்.