ஆசிய விளையாட்டு போட்டி: 107 பதக்கங்கள்…இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை இல்லாத அளவாக 107 பதக்கங்களை வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
19 ஆசிய விளையாட்டு போட்டிகள் ஆனது கடந்த செப்டம்பர் 23ம் தேதி சீனாவின் ஹாங்சோவ் நகரில் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த ஆசிய விளையாட்டு போட்டியில் சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, பாகிஸ்தான் உட்பட 45 நாடுகளை சேர்ந்த 12,500 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் 40 வகையான விளையாட்டுகள் 61 பிரிவுகளில் நடத்தப்படுகின்றன. இதில் இந்திய அணியில் உள்ள 699 வீரர் மற்றும் வீராங்கனைகள் 39 விளையாட்டுகளில் பங்கேற்று, இந்தியாவிற்காக தங்கம், வெள்ளி என பல பதக்கங்களை வென்று வருகின்றனர்.
அந்தவகையில், தற்போது வரை 107 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. அதன்படி, 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கல பதக்கங்களை இந்தியா வென்று இந்தியா வரலாறு படைத்துள்ளது. இந்நிலையில், பலரும் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் குவித்து வருகிறார்கள.
தற்போது, பிரதமர் மோடி இது குறித்து தனது X தள பக்கத்தில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு இது ஒரு வரலாற்று சாதனை. 60 ஆண்டுகளில் இல்லாத வகையில், 107 பதக்கங்களை வென்றதில் ஒட்டுமொத்த நாடும் மகிழ்ச்சியில் உள்ளது, நமது வீரர்களின் அசைக்க முடியாத உறுதியும், கடின உழைப்பும் நாட்டை பெருமைப்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்