புறநோயாளிகள் சிகிச்சை புறக்கணிப்பு போராட்டம்.! மாநில அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் அறிவிப்பு.!
மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கடந்த மாதம் (செப்டம்பர்) முதல் வாரத்தில் 2 கர்பிணி பெண்கள் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டு இருந்தனர். அவர்கள் பிரசவ நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 29ஆம் தேதியும் கர்பிணி ஒருவர் ராஜாஜி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தனர். இதனால் விவகாரம் பெரியதானது.
இது குறித்த ரத்த மாதிரிகளை, சுகாதாரத்துறை ஊழியர் வினோத் என்பவர் ராஜாஜி மருத்துவமனையில் இருந்து எடுத்து சென்று மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரில் ஆய்வுக்கு உட்படுத்தியாகவும், அந்த அறிக்கையை கொண்டு மாவட்ட ஆட்சியர் , மாநில சுதாரத்துறை ஆணையருக்கு ஆட்சியர் அறிக்கை சமர்பித்ததாகவும், கூறப்படுகிறது.
மருத்துவர்கள் சார்பில் கூறுகையில், மாவட்ட ஆட்சியர் மருத்துவ வல்லுநர் கிடையாது. மாநில சுகாதாரத்துறை ஆய்வு குழு தான் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். என்றும், அத்துமீறி நுழைந்து மருத்துவ மாதிரிகளை எடுத்து சென்ற ஊழியர் வினோத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
மருத்துவர்கள் கடந்த 6 நாட்களாக பெரும்பாலான அறுவை சிகிச்சைகளில் ஈடுபடாமல் இருந்து வருகின்றனர். இதனால் வெளியூரில் இருந்து தங்கி இருந்து சிகிச்சை பெற வந்த நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். தென் தமிழகத்தை பொறுத்தவரை தலைமை அரசு மருத்துவமனை போல மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிட தக்கது .
இப்படி இருக்க நேற்று சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி இயக்குனர் உடன் ராஜாஜி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனால் மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்து சென்றுள்ளனர்.
வரும் அக்டோபர் 9ஆம் தேதி பயோமெட்ரிக் சென்சார் பதிவேடு வைக்காமல் வேலைக்கு செல்வது. அக்டோபர் 11 தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம், அக்டோபர் 13ஆம் தேதி புறநோயாளிகளுக்கு சிகிச்சை மறுத்து போராட்டம் என தங்கள் போராட்டத்தை நடத்த உள்ளனர் என மாநில மருத்துவர் சங்க தலைவர் செந்தில் அறிவித்துள்ளார்.