சென்னையில் உலகக் கோப்பை கிரிக்கெட்.! சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்..தெற்கு ரயில்வே அறிவிப்பு.!
இந்த ஆண்டிற்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அக்டோபர் 5ம் தேதித் தொடங்கியது. அதன்படி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியுடன் உலகக்கோப்பை தொடர் தொடங்கியது.
இப்போட்டியில் இங்கிலாந்து அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன்பிறகு இரண்டாவது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி நெதர்லாந்தை எதிர்கொண்டது. இதில் பாகிஸ்தான் 286 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய நெதர்லாந்து அணி 41 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வென்றது. இன்று மூன்றாவது லீக் போட்டியில் பங்களாதேஷ் அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் விளையாடி வருகிறது. ஆனால் இந்த போட்டிகளை விட ரசிகர்களுக்கு சென்னையில் நடைபெறும் போட்டிகள் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
அதன்படி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் உலகக்கோப்பைத் தொடரின் 5 லீக் போட்டிகள் நடைபெறவுள்ளது. அதன்படி, அக்-8ம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. அக்-13ம் தேதி நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீச்சை செய்ய உள்ளன. அக்-18ம் தேதி நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.
அதே போல, அக்டோபர் 23ம் தேதி பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணியும் அக்டோபர் 27ம் தேதி பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணியும் மோதவுள்ளது. சென்னையில் நடைபெறும் இந்த போட்டிகளை காண்பதற்காக ரயில், விமானம் மூலம் பல பகுதிகளில் இருந்து பெருமளவில் வருவார்கள். ரசிகர்கள் அதிக அளவில் வரும்போது இப்போது இயக்கத்தில் இருக்கும் ரயில்கள் போதுமானதாக இல்லாமலா இருக்கலாம்.
இதனால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் 8, 13, 18, 23 மற்றும் 27 ஆகிய 5 தேதிகளில் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சிந்தாரிப்பேட்டை முதல் வேளச்சேரி வரையிலான பறக்கும் ரயில் வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.