WorldCup2023: நெதர்லாந்திற்கு 287 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்..!
கிரிக்கெட் ரசிகர்கள்ஆவலுடன் எதிர்பார்த்த ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், நியூசிலாந்து அணியும் மோதியது. இப்போட்டியில் நியூசிலாந்து அணி, 36.2 ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் கான்வே 152* ரன்களும், ரச்சின் ரவீந்திரன் 123* ரன்களும் குவிந்தனர்.
இதைத்தொடர்ந்து இன்று 2-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியும், நெதர்லாந்து அணியும் எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து, பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹா இருவரும் களமிங்கினர். ஆட்டம் தொடங்கியது முதல் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இருப்பினும் 4-வது ஓவரில் லோகன் வான் வீசிய பந்தை அவரிடமே அடித்து ஃபகார் ஜமான் தனது விக்கெட்டை 12 ரன்னில் இழந்தார்.
இவரை தெடர்ந்து களமிறங்கிய கேப்டன் பாபர் ஆசாம் வந்த வேகத்தில் 5 ரன் மட்டும் எடுத்து வெளியேறினார். களத்தில் நிதானமாக விளையாடிய தொடக்க வீரர் இமாம்-உல்-ஹா 11-வது ஓவரில் 15 ரன்கள் மட்டும் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் பாகிஸ்தான் அணி 38 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்தது. பின்னர் களமிறங்கிய முகமது ரிஸ்வான் , சவுத் ஷகீல் இருவரும் கைகோர்த்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நிதானமாக விளையாடிய இருவரும் அரைசதம் விளாசினர். இதனால் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது. இவர்கள் கூட்டணியில் 120 ரன்கள் குவித்தனர். பின்னர் இருவரும் 68 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர்.
முகமது ரிஸ்வான் 8 பவுண்டரி விளாசி 68 ரன் எடுத்தார். சவுத் ஷகீல் 9 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் அடித்து 68 ரன் சேர்த்தார். பிறகு மத்தியில் களம் கண்ட முகமது நவாஸ் 39, ஷதாப் கான் 32 எடுத்து அணியின் எண்ணிக்கையை மேலும் உயர்த்தினர். இறுதியாக பாகிஸ்தான் 49 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 286 ரன்கள் எடுத்தனர். நெதர்லாந்து அணியில் பாஸ் டி லீடே 4 விக்கெட்டையும் , கொலின் அக்கர்மேன் 2 விக்கெட்டையும், ஆர்யன் தத் , லோகன் வான் மற்றும் பால் வான் மீகெரென் தலா 1 விக்கெட்டை பறித்தனர். 287 ரன்கள் என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கவுள்ளது.