இன்னுமா அதை நீங்க விடல!.. அதிமுகவும், பாஜகவும் எங்களுக்கு ஒன்றுதான்.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
அதிமுகவும், பாஜகவும் எங்களுக்கு ஒன்றுதான் என திமுகவுக்கும், பாஜகவுக்கும்தான் இனி போட்டி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய கருத்து தொடர்பான கேள்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார். அதிமுக – பாஜக கூட்டணி முறிவிற்கு பிறகு நேற்று சென்னை தி- நகரில் பாஜக கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வகைகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, கூட்டணியில் இருந்து பிரிந்து செல்பவர்கள் செல்லட்டும், அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். கூட்டணி முறிவு பற்றி தேசிய தலைமையிடம் எனது ஆழமான கருத்தை முன்வைத்துள்ளேன். இனி தேசிய தலைமை முடிவு செய்யும் என தெரிவித்தார். இதன்பின் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, 2024 தேர்தலில் பாஜகவுக்கும் – திமுகவுக்கும் தான் போட்டி, பாஜக சார்பாக நாங்கள் செய்ததை சொல்கிறோம். திமுக சார்பாக அவர்கள் செய்ததை சொல்லட்டும். மக்கள் முடிவு எடுப்பார்கள் என கூறியிருந்தார்.
இந்த நிலையில், சென்னையில் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், நான் முதல்வன் என்ற திட்டம் பள்ளி மாணவர்கள் அடுத்த என்ன படிக்க வேண்டும், கல்லூரி மாணவர்கள் அடுத்து என்ன படிக்க வேண்டும் என்ற அறிவுரை வழங்கும் வகையில் இந்த திட்டம் முதலமைச்சரின் பிறந்தநாள் அன்று கொண்டுவரப்பட்டது.
அதுவும், 10 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் 13 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மாணவ., மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுத்துள்ளோம் என கூறினார். இதன்பின் அண்ணாமலை கருத்து குறித்த கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின், இதை வந்து அதிமுக கிட்ட தான் கேட்கவேண்டும், அதிமுகவும், பாஜகவும் எங்களுக்கு ஒன்றுதான். திமுகவுக்கு யார் போட்டி என்பதில்தான் மிகப்பெரிய போட்டி நடந்து கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.
ஆளுநர் அவருக்குரிய வேலையை செய்யாமல், தேவையில்லாமல் அரசியல்வாதி போல் செயல்படுகிறார். இதனை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் வாங்கப்பட்டது. ஆசிரியர்களின் கோரிக்கை நிதிநிலைக்கு ஏற்ப முதலமைச்சர் நிறைவேற்றுவார் என கூறினார். பின்னர் சனாதனம் குறித்த கேள்விக்கு, அதை இன்னுமா விடல என கூலாக பதிலளித்தார்.
உதயநிதி கூறுகையில், சனாதனத்தை தொடர்ந்து பேசிக்கொண்டு தான் இருப்பேன். பெரியார், அம்பேத்கர் மற்றும் எங்கள் கட்சி தலைவர்கள் கலைஞர், அண்ணா உள்ளிட்டோர் பேசியுள்ளனர். அவர்களை விட நான் ஒன்றும் அதிகமாக பேசவில்லை, ஆனால் நான் பேசியது தான் இப்ப பேசப்பட்டு வருகிறது. தேர்தல் நெருங்குவதால் இது திசை திருப்பும் செயலாகும். இதுகுறித்து பின்னர் பேசுவோம் என பதிலளித்தார்.