பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டிச.21ல் மீண்டும் ஆஜராக உத்தரவு!
திமுக பொருளாளர் டிஆர் பாலு தொடர்ந்த வழக்கில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீண்டும் டிசம்பர் 21ம் தேதி நேரில் ஆஜராக சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் கட்சியின் மூத்த தலைவர்களின் சொத்துப் படியலை அண்ணாமலை வெளியிட்டிருந்தார். இதற்கு திமுகவினர் கடும் தீர்ப்பு தெரிவித்து அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
அதுமட்டுமில்லாமல் அவதூறு பரப்புவதாக கூறி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்குகளும் தொடரப்பட்டது. அந்தவகையில், வதூறான கருத்துக்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்ததாக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திமுக எம்பி டி.ஆர்.பாலு வழக்கு தொடுத்திருந்தார்.
அந்த மனுவில்,திமுக சொத்து பட்டியல் விவகாரத்தில் அடிப்படை ஆதாரமின்றி தன்னைப் பற்றி அவதூறு கருத்துக்களை கூறியதாகவும், எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது எனவும் கூறியிருந்தார். கடந்த ஜூலை 14ம் தேதி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான நிலையில், அண்ணாமலையை மீண்டும் இன்று ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது.
அதன்படி, டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கில் இன்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் ஆஜரானார். மீண்டும் இவ்வழக்கு தொடர்பாக டிசம்பர் 21ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, DMK Files குறித்த என்னுடைய பேச்சில் எந்த தவறும் இல்லை, வழக்கை சந்திக்க தயார் என கூறினார்.