பாஜக கூட்டணியில் இருந்து செல்பவர்கள் செல்லட்டும்.! அண்ணாமலை பரபரப்பு பேச்சு.!
![BJP State Leader Annamalai](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2023/10/BJP-State-Leader-Annamalai.jpg)
அதிமுக பாஜக கூட்டணி முறிவுக்கு பின்னர் தமிழக பாஜக அரசியல் வட்டாரம் மிகவும் பரபரப்பாக இயங்கி வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய அங்கமாக விளங்கிய அதிமுக விலகியது பாஜக கூட்டணிக்கு தமிழகத்தில் ஓர் பாதிப்பாக பேசப்பட்டாலும், பாஜகவினரின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி தெளிவாக தெரிவிக்கப்படாமல் இருந்து வந்தது.
ஏற்கனவே இந்த கூட்டணி முறிவு குறித்து விளக்கம் அளிக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி சென்று இருந்தார். அங்கு தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து தனது விளக்கங்களை அண்ணாமலை அளித்தார்.
அதன் பிறகு நேற்று பாஜக தலைவர் இல்லாமல் அமைப்பு செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இன்று காலை மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா ஆகிய முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
பாஜக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் அண்ணாமலை பேசுகையில், அதிமுக – பாஜக கூட்டணி முறிவில், நம்மிடம் இருந்து பிரிந்து செல்பவர்கள் செல்லட்டும், அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். கூட்டணி முறிவு பற்றி தேசிய தலைமையிடம் விளக்கம் அளித்துள்ளேன். இனி தேசிய தலைமை முடிவு செய்யும். இதில் மாநில தலைமை தலையிட முடியாது என அண்ணாமலை பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும் என் மண் என் மக்கள் நடைபயணம் ஜனவரி மாதம் முடிவடையும் போது பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை புரிவார் என்றும் அண்ணாமலை பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.