சுதந்திரமாக செயல்படுகிறோம்… சீன பிரச்சாரத்தை நாங்கள் பரப்பவில்லை.! நியூஸ் கிளிக் விளக்கம்.!
டெல்லியில் நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்தின் மீது, வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக நிதியுதவி பெற்றதாக அமலாக்கத்துறை வழக்கு பதிந்து வைத்து இருந்தது. அந்நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளில் 38 கோடி ரூபாய் வரையில் வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக பெற்றதாக கூறி அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து இருந்தது.
இந்த வழக்கின் கீழ், டெல்லி சிறப்பு காவல் பிரிவினர், சட்டவிரோத செயல் தடுப்பு நடவடிக்கையின் கீழ் டெல்லி நியூஸ் கிளிக் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து அங்குள்ள ஆதாரங்கள் பாதிக்கப்பட கூடாது என்ற நோக்கில் நியூஸ் கிளிக் அலுவலகத்திற்கு டெல்லி காவல்துறையினர் சீல் வைத்தனர்.
இந்த சோதனையை தொடர்ந்து நியூஸ் கிளிக் தலைமை செய்தி அதிகாரி பிரபீர் புர்கயாஷ்டா, மனித வள மேம்பாட்டு அதிகாரி அமித் சக்கரவர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு டெல்லி போலீசாரின் விசாரணையில் உள்ளனர்.
இந்நிலையில் நியூஸ் கிளிக் நிறுவனம் இன்று நடந்த சோதனை குறித்து தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிடுகையில், நியூஸ்க்ளிக் ஒரு சுதந்திரமான செய்தி இணையதளம். எங்கள் பத்திரிகை தொழிலின் நோக்கம் உயர்ந்த தரத்தை அடிப்படையாகக் கொண்டது. நியூஸ்க்ளிக் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவொரு சீன நிறுவனம் அல்லது அதிகாரத்தின் உத்தரவின் பேரில் எந்த செய்தியையும் அல்லது தகவலையும் வெளியிடாது.
சீனப் பிரச்சாரத்தை எங்கள் இணையதளத்தில் பரப்புவதில்லை. நாங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்ட உள்ளடக்கம் தொடர்பாக நெவில் ராய் சிங்கமிடமிருந்து வழிகாட்டுதல்களைப் பெறவில்லை. நியூஸ்க்ளிக் மூலம் பெறப்பட்ட அனைத்து நிதியும் பொருத்தமான வங்கி வழிகள் மூலம் பெறப்பட்டு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்திய ரிசர்வ் வங்கியால் நிரூபிக்கப்பட்டபடி, சட்டப்படி தேவைப்படும் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்துள்ளது.