உஜ்வாலா திட்ட சிலிண்டரின் விலை மேலும் ரூ.100 குறைப்பு – மத்திய அமைச்சர் அறிவிப்பு!

Ujjwala Yojana

உஜ்வாலா திட்ட சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மேலும் ரூ.100 குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா பயனாளிகளுக்கான மானியத் தொகையை சமையல் கேஸ் சிலிண்டர் ஒன்றுக்கு 200 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக உயர்த்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, கடந்த மாதம் ரக்ஷாபந்தன் பண்டிகையின்போது உஜ்வாலா திட்ட கேஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ரூ.100 குறைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ.703 ஆக விற்பனை செய்யப்பட்டது. தற்போது மேலும் 100 ரூபாய் விலை குறைவு காரணமாக பொது மக்களுக்கு 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ.603க்கு கிடைக்கும். அதேநேரத்தில் வெளிச்சந்தையில் ரூ.903 க்கு விற்பனையாகிறது.

தேர்தல் நெருங்குவதால் சிலிண்டர் விலையை பாஜக குறைத்து வருகிறது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகிறது. இதனிடையே, அடுத்தாண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரவுள்ளதால், மத்திய பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில், குறிப்பாக விலை குறிப்பு, பல்வேறு மாநிலங்களில் கோடிக்கணக்கான மதிப்புள்ள திட்டங்கள் உள்ளிட்டவை அடங்கும்.

வரும் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால், நேருவுக்கு பின்னர் 3வது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் தலைவர் என்கிற பெருமையை பெறுவார். அதுமட்டுமில்லாமல், இந்த ஆண்டு இறுதியில் சத்தீஷ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா என 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது. இதனால் பாஜக அரசு தேர்தல் வியூகங்களை தீவிரமாக வகுத்து வருகிறது. இந்த சூழலில் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் காலை 11 மணிக்கு கூடியது.

இந்த கூட்டத்தில், உஜ்வாலா திட்ட சமையல் கேஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.100 குறைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், தெலுங்கானாவில் பழங்குடியினருக்கு பல்கலைக்கழகம் அமைக்கவும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் பிரதமர் மோடி தெலுங்கானா சென்றிருந்த நிலையில், தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்