அதெல்லாம் டைம் வேஸ்ட்! அதான் என்னுடைய மனைவிகிட்ட கொடுத்துட்டேன்! மனம் திறந்த கேப்டன் ரோஹித்!
கடந்த 9 மாதங்களாக தன்னுடைய மொபைல் போனில் சமூக வலைத்தளங்களான ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் இல்லை என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து இடையேயான போட்டியுடன் தொடங்குகிறது.
இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், தென்னாபிரிக்கா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக்கோப்பை தொடர் இந்தாண்டு இந்தியாவில் நடைபெற உள்ளதால் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. உலகக்கோப்பை தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், நேற்று வரை பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்றது.
இதில் இந்தியாவின் இரண்டு பயிற்சி ஆட்டங்களும் மழையால் கைவிடப்பட்டது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், பயிற்சி போட்டியில் ஒரு பால் கூட போடாமல், விளையாடாமல், உலகக்கோப்பை தொடரில் வரும் 8ம் தேதி சென்னையில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்கிறது இந்தியா. இருப்பினும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த முறை இந்தியாவில் உலகக்கோப்பை தொடர் நடைபெறுவதால், கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் ரோஹித் சர்மா அண்ட் கோ உள்ளது. அதன்படி, இந்திய அணியில் வலுவான பேட்டிங் வரிசை மற்றும் பந்துவீச்சு வலுவாக இருப்பதால், இந்த கோப்பை இந்தியாவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களான ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கம் போகவில்லை என ரோஹித் சர்மா கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், கடந்த 9 மாதங்களாக எனது தொலைபேசியில் சமூக வலைத்தளங்களான ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் இல்லை. எனது சமூக வலைத்தள கணக்குகளை என்னுடைய மனைவி பார்த்துக்கொள்கிறார்.
ஏதேனும் பொதுவான பதிவு அல்லது புகைப்படம் போட வேண்டும் என்றால், அதை என் மனைவி கையாண்டு வருகிறார். சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதால் கவனம் சிதறுகிறது, நேரத்தை வீணடிக்கிறது. இதனால் எனது தொலைபேசியில் அதை வைத்திருக்க வேண்டாம் என்று முடிவு செய்தேன், ஏனெனில் அது இருந்தால், நான் அதைப் பார்ப்பேன், இதனால் கவனம் மற்றும் நேரம் வீணாகும் என தெரிவித்துள்ளார்.