ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாடு! மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை!
ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகளின் மாநாடு கடந்த ஒரு சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில் அரசின் தலைமை செயலாளர், அமைச்சர்கள், ஆட்சியர்கள், காவல்துறை அலுவலர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்று வருகின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாட்டின் சட்ட – ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள், அரசின் புதிய அறிவிப்புகள், திட்டங்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து முதல்வர் ஸ்டாலின் விரிவான ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி வருகிறார்.
அப்போது முதல்வர் கூறுகையில், அரசுக்கு ஆலோசனைகளை எவ்வித தயக்கமுமின்றி, மக்கள் நலனை மையமாக கொண்டு வழங்க வேண்டும். அமைதியான தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முனைவோருக்கு இடமளிக்கக்கூடாது. பொது அமைதியை கெடுக்க நினைப்பவர்களை முழுமையாக தடுப்பது அவசியம். கள்ளச்சாராயம், போதை பொருட்களை அறவே ஒழிக்க வேண்டும். அதுதொடர்பான குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என சட்டம் – ஒழுங்கு தொடர்பாக பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
இந்த நிலையில், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை தலைமை செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். அரசின் அறிவிப்பு மற்றும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஆய்வு செய்து ஆலோசனை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றன.