டெல்லியில் நியூஸ்கிளிக் செய்தி நிறுவன அலுவலகத்திற்கு காவல்துறையினர் சீல்.!
டெல்லியில் நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்தின் மீது, வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக நிதியுதவி பெற்றதாக அமலாக்கத்துறை வழக்கு பதிந்து வைத்து இருந்தது. இந்த வழக்கின் கீழ் கடந்த 2021ஆம் ஆண்டு அமலாக்கத்துறை நியூஸ் கிளிக் நிறுவனத்தின் மீது சோதனை நடத்தினர்.
இதனை தொடர்ந்து நியூஸ் கிளிக் செய்தி நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றம் சென்று வழக்கு தொடர்ந்து, அமலாக்கத்துறைக்கு எதிராக உத்தரவை பெற்றது. அதன் பெயரில் நியூஸ் கிளிக் செய்தி நிறுவனம் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொள்ள இடைக்கால தடை விதிக்கப்பட்டு இருந்தது.
நியூஸ் கிளிக் செய்தி நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளில் 38 கோடி ரூபாய் வரையில் வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக பெற்றதாக கூறி அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து இருந்தது. இந்த வழக்கின் கீழ், டெல்லி சிறப்பு காவல் பிரிவினர், சட்டவிரோத செயல் தடுப்பு நடவடிக்கையின் கீழ் சோதனை மேற்கொண்டனர்.
நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்திற்கு சம்பந்தமான 30 இடங்கள் மற்றும் 8 பத்திரிகையாளர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனை நிறைவடைந்து தற்போது நியூஸ் கிளிக் செய்தி நிறுவன அலுவலகத்திற்குள் யாரும் நுழைய கூடாது. அங்குள்ள ஆதாரங்கள் பாதிக்கப்பட கூடாது என்ற நோக்கில் நியூஸ் கிளிக் அலுவலகத்திற்கு டெல்லி காவல்துறையினர் சீல் வைத்துள்ளனர். மேலும், நியூஸ் கிளிக் பத்திரிகையாளர்கள் சிலரின் லேப்டாப்கள், கைபேசிகள் ஆகியவையும் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.