48 மணி நேரத்தில் மகாராஷ்டிரா அரசு மருத்துவமனையில் 31 பேர் உயிரிழப்பு.! காங்கிரஸ் கடும் கண்டனம்.!
மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் மாவட்டத்தில் உள்ள சங்கர் ராவ் சவான் அரசு மருத்துவமனையில் (நேற்று) 24 மணி நேரத்தில் 12 பிறந்த குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்தனர். நேற்றிரவு மேலும் 7 பேர் உயிரிழந்ததையடுத்து (இன்று) 48 மணி நேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனையில் உயிரிழந்த 31 பேரில் 15 குழந்தைகள் மற்றும் 16 பெரியவர்கள் என்று கூறப்படுகிறது. மருந்துகள் மற்றும் மருத்துவர்கள் பற்றாக்குறையால் தான் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் குறிப்பிட்ட அரசு மருத்துவமனையின் டீன் டாக்டர் ஷியாம்ராவ் வகோட், மேற்கண்ட குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், மருந்துகள் மற்றும் மருத்துவர்களுக்கு தட்டுப்பாடு என்பது தவறான குற்றச்சாட்டு. அந்த பேச்சுக்கே இங்கு இடமில்லை, பாம்புக்கடி உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்த நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளித்தும் அந்த சிகிச்சை பலனளிக்காததால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட காரணம் என்று கூறி, இது ஒரு மூன்றாம் நிலை மருத்துவமனை மையம் என்றும் அவர் விளக்கினார்.
70-80 கிமீ சுற்றளவில் உள்ள ஒரே சுகாதார மையமாக இந்த மையம் இருப்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து நோயாளிகள் வருகிறார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கைவிட சில சமயங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகும் என்றும் ‘மருந்துகள் தட்டுப்பாடு’ எனும் குற்றச்சாட்டுகளை டீன் மறுத்துள்ளார்.
தற்போது, அரசு மருத்துவமனையில் நடந்த இந்த உயிரிழப்புகள் குறித்து அம்மாநிலத்தில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மாநில அரசு மீது, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது X தள பக்கத்தில், “இந்த சம்பவம் மிகவும் வேதனையானது. இந்த நோயாளிகள் மருந்து மற்றும் சிகிச்சை இல்லாததால் இறந்ததாக கூறப்படுகிற, இது மிகவும் கவலை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தனது பதிவில் வலிறுத்தியுள்ளார்.
மேலும், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி னது X தள பக்கத்தில், மகாராஷ்டரா மாநிலம், நாந்தேட் அரசு மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாட்டால் 12 பிறந்த குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வருத்தமளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பா.ஜ.க அரசு தனது விளம்பரத்திற்காக பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கிறது, ஆனால் குழந்தைகளுக்கு மருந்து கொடுக்க பணமில்லையா? பாஜகவின் பார்வையில் ஏழைகளின் உயிருக்கு மதிப்பில்லை என்று வன்மையாக கண்டித்து தனது பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.