காத்திருந்த ‘அமலாபால்’ எதுக்கா இருக்கும்….
பாலிவுட்டின் மூத்த இயக்குநர் நரேஷ் மல்கோத்ரா இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இன்னும் தலைப்பு சூட்டப்படாத இந்தப் படத்தில் மற்றொரு முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பவர் அர்ஜுன் ராம்பால். அக்டோபர் மாதம் முதல் இமயமலைப் பகுதிகளில் படப்பிடிப்புத் தொடங்குகிறது. “ நீச்சல் உடையில் தோன்றுவது உட்பட இதற்குமுன் பாலிவுட்டிலிருந்து பல அழைப்புகள் வந்தன. ஆனால் எதுவுமே எனக்கானது இல்லை என்று நிராகரித்தேன். எனக்கானது கிடைக்கும்வரை காத்திருந்தேன். இயக்குநர் நரேஷ் கதையை என்னிடம் விவரித்தபோது, எனக்குக் கச்சிதமாகப் பொருந்தக்கூடிய கதாபாத்திரமாக அது இருந்ததால் உடனே ஒப்புக்கொண்டேன்” என இந்தியில் அறிமுகமாவது பற்றிக் கூறியிருக்கிறார் அமலாபால்.
திருமணத்துக்குப் பின் அதிக ஹிட் கொடுப்பதில் இக்காலக் கதாநாயகிகளும் சளைத்தவர்கள் இல்லை என்பதற்கு அமலா பால் உதாரணம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துவிட்டாலும் இந்திப்பட உலகில் நுழையாமல் இருந்தார் அமலாபால். தற்போது அங்கேயும் அடிவைக்கிறார்.
இதற்கிடையில் இயக்குநர் பிளேஸ்ஸி இயக்கத்தில் ‘அதுஜீவிதம்’ என்ற மலையாளப் படத்தில் பிருதிவிராஜூடன் நடித்து முடித்திருக்கும் அமலாபால், விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கத் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியிருக்கும் ‘ராட்சசன்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துவருகிறார்.