AsianGames2023: பதக்க வேட்டையில் இந்தியா.! 3000மீ ஸ்டீபிள்சேஸில் வெள்ளி, வெண்கலம் வென்று அசத்தல்.!
19 வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் ஹாங்சோவ் நகரில் தொடங்கி, 9 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் கியான்டாங் ஹாங்சோ ஒலிம்பிக் விளையாட்டு மைய அரங்கத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டியின் பெண்களுக்கான 3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்தியா சார்பாக பருல் சவுத்ரி மற்றும் பிரித்தி ஆகிய இருவரும் பதக்கங்களை வென்றனர். இதில் பருல் சவுத்ரி 9:27.63 வினாடிகளில் 3,000 மீட்டரைக் கடந்தார். இருந்தும் பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த வின்ஃப்ரெட் 9:18.28 வினாடிகளில் இலக்கை அடைந்தார். இதனால் பருல் சவுத்ரி வெள்ளிப் பதக்கத்தை வென்றார். வின்ஃப்ரெட் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார்.
மேலும், பருல் சவுத்ரி மட்டுமல்லாம் இந்த போட்டியில் 9:43.32 வினாடிகளில் பிரித்தி மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். இதனால் இந்தியாவின் பதக்கத்தில் மேலும் 2 பதக்கங்கள் சேர்ந்துள்ளன. இதில் தற்போதைய ஆசிய விளையாட்டு போட்டியின் ஸ்டீபிள்சேஸ் சாதனையாளராக வின்ஃப்ரெட் உள்ளார்.
ஆனால், கடந்த 2018ம் ஆண்டு ஜூலை 20 அன்று நடந்த போட்டியில் கென்யாவைச் சேர்ந்த பீட்ரைஸ் 8:44.32 வினாடிகளில் இலக்கை அடைந்தது உலக சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக, நடந்த பெண்களுக்கான 3000மீ ஸ்பீடு ஸ்கேட்டிங் ரிலே இறுதிப் போட்டியில் இந்தியா 4:34.861 வினாடிகளில் இலக்கைக் கடந்து வெண்கலப் பதக்கத்தை வென்றது.
இது இந்தியாவின் முதல் ரோலர் ஸ்கேட்டிங் பதக்கமாகும். பிறகு இதே பிரிவில் இறுதிப் போட்டியில் 4:10.128 வினாடிகளில் இலக்கைக் கடந்த இந்திய ஆண்கள் அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது. இதன்மூலம், இந்தியா 13 தங்கம், 22 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தமாக 58 பதக்கங்களை வென்று, பதக்கபட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.