AsianGames2023: துப்பாக்கி சுடுதல்..10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் வெள்ளி வென்றது இந்தியா.!
சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கிச்சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சரப்ஜோத் சிங், திவ்யா இணை வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளனர். இந்த பதக்கத்தின் மூலம் 7வது நாளாகத் தொடரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் பதக்கத்தில் மேலும் ஒரு வெள்ளி சேர்ந்துள்ளது.
இன்று காலை துப்பாக்கிச்சுடுதலில் 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு அணி இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் சரப்ஜோத் சிங், தாடிகோல் சுப்பராஜு திவ்யா இணை 14 புள்ளிகள் எடுத்து இரண்டாம் இடம் பிடித்தனர். இதனால் சரப்ஜோத் மற்றும் திவ்யா இணை வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளனர்.
இதில் சீனா சார்பாக விளையாடிய ஜாங் போவன், ஜியாங் இணை 16 புள்ளிகள் எடுத்து தங்கப்பதக்கத்தை வென்றனர். தொடர்ந்து ஈரான் மற்றும் கொரியா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. இந்த நிலையில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 34 பதக்கங்களை பெற்று இந்திய அணி பதக்கப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
அதன்படி, இந்தியா அணி இதுவரை நடந்த போட்டிகளில் 8 தங்கம், 13 வெள்ளி, 13 வெண்கலப்பதக்கங்களை வென்றுள்ளது. அதேபோல, சீனா 106 தங்கம், 65 வெள்ளி மற்றும் 33 வெண்கல பதக்கங்களுடன் 204 பதக்கங்களுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. ஜப்பான் மற்றும் கொரியா நாடுகள் 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ளது. மேலும், கடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் 16 தங்கம் உட்பட 70 பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் இந்தியா 8வது இடத்தை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.