மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதா.. குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் கடந்த செப்.18 முதல் 22-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, செப்.18ம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் பழைய நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதையடுத்து, அடுத்த நாள் சிறப்பு கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கி நடைபெற்றது. அப்போது, 75 ஆண்டு கால நாடாளுமன்ற பயணம், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா குறித்து விவாதம் நடைபெற்றது.
இதன்பின் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் ஒருநாள் முன்கூட்டியே தேதில் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதில், குறிப்பாக சிறப்பு கூட்டத்தொடரில் கடந்த 20ம் தேதி மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு தரும் மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். மாநில சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்ற மக்களவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். 15 ஆண்டுகளுக்கு இந்த மசோதா அமலில் இருக்கும். அதன் பிறகு வேண்டும் என்றால் நீட்டித்து கொள்ளலாம் என அறிவித்திருந்தார்.
இந்த மசோதாவுக்கு “நாரி சக்தி வந்தன்” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதா மீதான விவாதம் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதன்பின் இரண்டு நாட்களும் இந்த மசோதா பற்றி எதிர்க்கட்சிகள் பல்வேறு கருத்துகளை கூறினாலும், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பெரும்பாலான எதிர் கட்சிகள் இந்த திட்டத்திற்கு தங்கள் ஆதரவையே தெரிவித்தனர். இதையடுத்து, இந்த சட்ட மசோதாவானது மக்களவையில் பெருவாரியான வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. மொத்தமுள்ள 545 உறுப்பினர்களில் 454 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
2 பேர் மட்டும் எதிர்த்து வாக்களித்தனர். இதன்மூலம் மக்களவையில் இந்த மசோதாவானது நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மக்களவையில் நிறைவேறிய பின்னர் மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மாநிலங்களவையிலும் இந்த சட்டமசோதாவுக்கு ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பாகுபாடில்லாலாம் பெருவாரியான உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தனர். வாக்கெடுப்பில் 215 உறுப்பினர்களும் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஒருவர் கூட எதிர்த்து வாக்களிக்கவில்லை. இது வரலாற்று நிகழ்வு என மாநிலங்களவை தலைவர் குறிப்பிட்டு பேசினார். இதன் மூலம் இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
மசோதா நிறைவேறிய பிறகு நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே இந்த மசோதா அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் சட்டமசோதா ஒருமனதாக நிறைவேற்றப்படட்டதை தொடர்ந்து, குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.
குடியரசு தலைவர் ஒப்புதல் பெறப்பட்டு பின்னர் அந்த சட்ட மசோதா செயலாக்கம் பெரும். மக்கள் தொகை கனக்கடுப்பு, மக்களவை தொகுதிகள் மறுவரையறை ஆகியவை செய்த பின்னர் 2026இல் இந்த மசோதா செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதலை அடுத்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவையில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை ஒதுக்கீடு செய்ய வழி வகை செய்கிறது இந்த மசோதா என்பது குறிப்பிடத்தக்கது.