திருவண்ணாமலையில் தப்பிய கொள்ளையர்களை 25 கி.மீ., தூரம் விடாது துரத்திச் சென்று பிடித்த போலீஸ்!
இரு சக்கர வாகனங்களில் திருவண்ணாமலையில் தப்பிச் சென்ற சென்னையைச் சேர்ந்த கொள்ளையர்களை, 25 கிலோ மீட்டர் தூரம் அசுர வேகத்தில் துரத்திச் சென்று காவல்துறையினர் பிடித்துள்ளனர்.செய்யாறில் போலீசார் வாகன சோதனையில் நிற்காமல் 3 இரு சக்கர வாகனங்களில் வந்த 6 இளைஞர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பினர். செய்யாறு – காஞ்சிபுரம் சாலையில் மின்னல் வேகத்தில் சென்ற அவர்களை, போலிசார் இரு சக்கர வாகனத்தில் துரத்திச் சென்றனர்.17 கிலோ மீட்டர் தூரம் விடாது துரத்திய நிலையில், மாங்கால் கூட்டுரோடு சாலையில் இளைஞர்களை சுற்றி வளைத்தனர். அப்போது 2 இரு சக்கர வாகனங்கள் போலீசாரின் மீது மோதிவிட்டு தப்பின. 2 பேர் பிடிப்பட்டனர். தப்பிச் சென்றவர்களில் இருவர் அடுத்த 8 கிலோ மீட்டர் தொலைவில் தூசி காவல்துறையினரிடம் சிக்கினர்.
போலீசாரின் பிடியில் 2 பேர் மட்டும் சிக்கவில்லை. இந்த சம்பவத்தில் 3 போலீசார் காயமடைந்தனர். பிடிபட்ட 4 இளைஞர்களும் சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. பருவத மலைக்கு வந்த இவர்கள், அங்கு 2 இரு சக்கர வாகனங்களை திருடிக் கொண்டு, வரும் வழியில் ஆரணி பகுதியில் வழிப்பறி கொள்ளையிலும் துணிச்சலுடன் ஈடுபட்டுள்ளனர். இரு சக்கர வாகனங்கள் மற்றும் 15 செல்போன்கள் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டன. வழிப்பறி வழக்கில் ஆரணி போலீசாரிடம் நான்கு இளைஞர்களும் ஒப்படைக்கப்பட்டனர்.