காஷ்மீரில் மேலும் 2 பத்திரிகையாளர்களுக்கு கொலை மிரட்டல்…!
சுஜாத் புகாரியைத் தொடர்ந்து, காஷ்மீரில் மேலும் 2 பத்திரிகையாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.காஷ்மீரைச் ‘ரைஸிங் காஷ்மீர்’ பத்திரிகையின் ஆசிரியரான சுஜாத் புகாரி, கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஸ்ரீநகரில் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை நடப்பதற்கு 11 நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத இணையதள பிளாக் ஒன்றில், சுஜாத் புகாரிக்கு எதிராக ஆத்திரமூட்டும் கருத்துக்கள் வெளியிடப்பட்டு இருந்தன.
இந்நிலையில், சுஜாத் புகாரிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த, அதே பிளாக்கில் மேலும் 2 பத்திரிகையாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காஷ்மீரைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்களான இப்திகார் கிலானி, அகமது அலி பயாஸ் ஆகியோர் தற்போது மிரட்டப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் அமைதித் தீர்வுக்கான முயற்சியை தடுப்பதாக இவர்கள் இருவர் மீதும் அந்த பிளாக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.ஜம்மு- காஷ்மீர் மாநில பாஜக தலைவரான லால் சிங், கடந்த வாரம் பத்திரிகையாளர்களுக்கு பகிரங்க மிரட்டல் ஒன்றை விடுத்திருந்தார். கதுவா பாலியல் வன்கொலை உள்ளிட்ட பிரச்சனைகளை பத்திரிகைகள் பெரிதுபடுத்துவதாக கூறியிருந்த லால் சிங், காஷ்மீர் பத்திரிகையாளர்களுக்கு சுஜாத் புகாரியைப் போல உயிர்மேல் ஆசையில்லையா? என்றும் மிரட்டியிருந்தார்.இந்நிலையில், அதே தொனியிலேயே தற்போது இப்திகார் கிலானி, அகமது அலி பயாஸ் ஆகியோருக்கு மிரட்டல் வந்துள்ளது.
பத்திரிகையாளர்கள் பேரணி
இதனிடையே, சுஜாத் புகாரி படுகொலையைக் கண்டித்து, ஸ்ரீநகரில் ஊடகவியலாளர்கள் செவ்வாய்க்கிழமையன்று அமைதிப் பேரணி நடத்தினர். அப்போது அவர்கள், ‘ஆயுதங்களைத் தடை செய், கருத்துக்களைத் தடை செய்யாதே; ஊடகங்களை மவுனமாக்க முடியாது; ஊடகவியலாளர்களைக் கொல்வதை நிறுத்து; சுதந்திர நாட்டில் கருத்துச்சுதந்திரத்தை ஏற்றுக்கொள்; மனித உரிமைகளைத் துஷ்பிரேயோகம் செய்யாதே; கோழைத்தனமானத் தாக்குதல்களால் எங்களைப் பணியவைத்திட முடியாது என்ற முழக்கங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.