இங்கிலாந்தை பழிதீர்த்த இந்திய அணி!அகர்வால் தொடர்ச்சியாக அடிக்கும் 2-வது சதம்!
இந்திய ஏ அணி லீசெஸ்டரில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் வலிமையான இங்கிலாந்து லயன்ஸ் அணியை 102 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது
மயங்க் அகர்வால் முத்தரப்பு ஒருநாள் தொடரில் தொடர்ச்சியாக அடிக்கும் 2-வது சதமாகும். இதற்கு முந்தைய போட்டியில் மே.இ.தீவுகள் ஏ அணிக்கு எதிராகச் சதம் அடித்திருந்தார்.
104 பந்துகளைச் சந்தித்த அகர்வால் 112 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 4 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள் அடங்கும். அவருக்குத் துணையாக ஆடிய சுப்மான் கில் 72 ரன்களும், விகாரி 69 ரன்களும் சேர்த்தனர்.
இந்திய ஏ அணியில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள் ஐபிஎல் போட்டியில் விளையாடிய அனுபவம் உள்ளவர்கள் என்பதால், இந்த போட்டித்தொடரில் இங்கிலாந்து லயன்ஸுக்கும், மேற்கிந்தியத்தீவுகள் ஏ அணிக்கும் மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறார்கள்.
முதலாவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணியிடம் அடைந்த தோல்விக்கு இந்த போட்டியின் வெற்றி மூலம் பழிதீர்த்துக்கொண்டது. இந்தத் தோல்வியால் மேற்கிந்தியத்தீவுகள் ஏ அணிக்கு எதிரான லீக் போட்டியில் இங்கிலாந்து ஏ அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
இந்திய வீரர் மயங்க் அகர்வால் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார். சில போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். உள்நாட்டுப் போட்டிகளில் 2,173 ரன்கள் வரை அகர்வால் குவித்துள்ளார். விஜய் ஹசாரே போட்டியில் 723 ரன்கள் குவித்து, 105 சராசரி வைத்திருந்தார். ஆனால் இந்திய அணிக்குள் இன்னும் நிலையான இடம் கிடைக்காமல் இருந்து வருகிறார்.
இங்கிலாந்து லயன்ஸ், மேற்கிந்தியத்தீவுகள் ஏ அணி, இந்திய ஏ அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. லீசெஸ்டர் நகரில் நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் அணியை எதிர்கொண்டது இந்திய ஏ அணி.
டாஸ்வென்ற இந்திய ஏ அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்கள், மயங்க் அகர்வால், சுப்மான் கில் நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். முதல்விக்கெட்டுக்கு இருவரும் 165 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். கில் 72 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்துக் களமிறங்கிய விஹாரியும், அகர்வாலுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். சிறப்பாக ஆடிய அகர்வால் இந்தத் தொடரில் தனது 2-வது சதத்தை பதிவு செய்து 112 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த ரிஷாப் பந்த்(7), ஸ்ரேயாஸ் அய்யர்(6) விரைவாக வெளியேறினார்கள்.
5-வது விக்கெட்டுக்கு தீபக் ஹூடாவும், விஹாரியும் அணியை 300 ரன்களுக்கு மேல் கொண்டு சென்றனர். விஹாரி 69 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹூடா 33 ரன்களில் வெளியேறினார்.
50 ஓவர்கள் முடிவில் இந்திய ஏ அணி 6 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து லயன்ஸ் தரப்பில் பர்நார்டு, பிஷர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்கள்.
310 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து லயன்ஸ் அணி 41.3 ஓவர்களில் 207 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
சர்துல் தாக்கூர், பிரதிக் கிருஷ்ணா வேகத்தில் முதல் 3 முக்கியவிக்கெட்டுகளை இங்கிலாந்து லயன்ஸ் அணி இழந்தது. இதில் தொடக்க ஆட்டக்காரர் கபின்ஸ் கடந்த இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்த நிலையில், இந்தப் போட்டியில் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் அரைசதம் அடித்த ஹெயின் ஒரு ரன்னிலும், கேட் மோர் 7 ரன்னிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இந்த சரிவுக்குப் பின் இங்கிலாந்து லயன்ஸ் அணி மீளவே இல்லை. நடுவரிசை வீரர்களும், கீழ்வரிசை பேட்ஸ்மேன்களும் நிலைத்து ஆடாமல் விரைவாக ஆட்டமிழந்தனர். அணியில் அதிகபட்சமா டாஸன் 38 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இந்திய வீரர்கள் தரப்பில் தாக்கூர் 3 விக்கெட்டுகளையும், அகமது 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்