மீண்டும் போலீசில் சிக்கிய நடிகர் ஜெய்!
மீண்டும் போக்குவரத்து போலீசாரிடம் நடிகர் ஜெய் சாலை விதிகளை மீறி செயல்பட்டதால் சிக்கினார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடிகர் ஜெய் குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக அடையாறு சாஸ்திரி நகர் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கின் விசாரணைக்கு அவர் ஆஜராகாததால் சைதாப்பேட்டை நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது.
நீதிமன்றத்தில் சரணடைந்த அவருக்கு,பின்னர், 5 ஆயிரத்து 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், 6 மாதங்களுக்கு அவரின் ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது அடையாறு பகுதியில் சொகுசு காரில் சென்ற ஜெய், விதிகளை மீறி அதிக சப்தம் எழுப்பும் சைலன்சரை காரில் பொருத்தியிருந்ததற்காக போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர்.
பின்னர், எச்சரிக்கை செய்து அவரை அனுப்பினர். தன் தவறை ஒப்புக்கொண்ட ஜெய், இது போன்று அதிக ஒலி எழுப்பும் சைலன்சரை யாரும் பயன்படுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.