10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சிலை கடத்தல் மன்னன் கைது..!
விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி அருகே உள்ள ஆலடிபட்டியைச் சேர்ந்தவர் ஞானஅன்புசுவாமிதாஸ். இவர் கடந்த 2008-ம் ஆண்டு சிவகாமி அம்மன், சிவன்-பார்வதி உலோக சிலைகள் அவருடைய விவசாய நிலத்தை தோண்டும்போது கிடைத்தன.
இதுகுறித்து அவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அப்போது அந்த பிரிவின் இன்ஸ்பெக்டராக இருந்த காதர்பாட்சா, ஏட்டு சுப்புராஜ் ஆகியோர் விவசாய நிலத்தில் கிடைத்த 3 சிலைகளையும் கைப்பற்றினர்.
அவர்கள் அதனை அரசு கருவூலத்தில் சேர்க்காமல் சிலை கடத்தல் மன்னன் தீனதயாளிடம் ரூ. 15 லட்சத்துக்கு விற்றதாக தெரிகிறது. இந்த 3 சிலைகளின் சர்வதேச மதிப்பு ரூ. 9 கோடியாகும்.
இதனை சிலை கடத்தல் கும்பல் வெளிநாட்டில் விற்றுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு போலீசார் எடுத்த தீவிர நடவடிக்கையை தொடர்ந்து, டி.எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்றிருந்த காதர்பாட்சா மற்றும் சுப்புராஜை போலீசார் கைது செய்தனர்.
சிலை கடத்தலுக்கு உடந்தையாக இருந்த மதுரை மாவட்டம் தாட்கோ காலனியைச் சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 33) என்பவர் தலைமறைவானார். அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். ஆனால் 10 ஆண்டுகளாக அவர் போலீசாரிடம் சிக்காமல் போக்குகாட்டி வந்தார்.
இந்த நிலையில் முத்துப்பாண்டி மதுரையில் இருப்பதாக சிலை கடத்தல் போலீசாருக்கு 2 நாட்களுக்கு முன் தகவல் கிடைத்தது.
அதன்பேரில் மதுரையில் முகாமிட்ட போலீசார் நேற்று முத்துப்பாண்டியை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட அவரை வருகிற 9-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து முத்துப்பாண்டி மதுரை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.