திமுகவினரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் போராட்டம்!
நாமக்கல்லில் ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி வீசிய திமுகவினரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாமக்கல் அண்ணா சிலை அருகே கவர்னருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்தப்பட்டது. அதில் ஆளுநர் சென்ற கார் மீது கருப்புக்கொடி, பலூன்களை வீசியதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரை அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட 241 பேரில் 192 பேர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.