GST வரி, நல்லபல மாற்றங்களை கொண்டுவந்தது : மோடி..!
பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் பொருளாதாரத்தில், ஜிஎஸ்டி வரி, நல்லபல மாற்றங்களை கொண்டுவந்திருப்பதாக, கூறியிருக்கிறார்.
டெல்லி அக்பர் சாலையில் அமைக்கப்பட உள்ள மத்திய வர்த்தக அமைச்சக கட்டிடமான வன்ஜியா பவனுக்கான அடிக்கல் நாட்டுதல் விழா வெள்ளியன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று அடிக்கல் நாட்டிய பிரதமர், பின்னர், நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
இன்றைய நாளில், தொழில்நுட்பம் வணிகம் செய்வதற்கான வழிகளை எளிதாக்கியுள்ளோடு, வரும் ஆண்டுகளில், இது மேலும் மேம்படும் என்றும் பிரதமர் கூறினார். கடந்தாண்டு அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி வரி திட்டம், நாட்டின் பொருளாதாரத்தில், நல்ல பல மாற்றங்களை கொண்டுவந்திருப்பதாக, பெருமிதம் பொங்க பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட பின்னர், புதிதாக, 52 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வரி செலுத்தத் தொடங்கியிருப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். பன்னாட்டு வர்த்தகத்தில், இந்தியாவின் பங்கு தற்போது உள்ள 3 புள்ளி 4 விழுக்காடு, இரட்டிப்பாக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
எண்ணெய் இறக்குமதியில் அதிக கவனம் செலுத்துவதை கைவிட்டுவிட்டு, நம் நாட்டிலேயே அவற்றின் மூலாதாரங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான GDP, கடந்த நிதியாண்டில், அதிகபட்சமாக 7 புள்ளி 7 விழுக்காடு இருந்ததாகவும், இது வருங்காலங்களில் இரட்டை இலக்கம் கொண்டதாக மாற, காலம் கனிந்திருப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார்.