தமிழகத்தில் கொடுமையான ஆட்சி நடக்கிறது : மு.க.ஸ்டாலின்..!
திருச்சி ஸ்ரீரங்கம் பத்ம சாலியார் திருமண மண்டபத்தில் இன்று தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண நிகழ்ச்சி மற்றும் காதணி விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க. வளர வேண்டும், மக்களுக்காக பாடுபட வேண்டும் என்பதற்காக இந்த இயக்கத்திற்காக பாடுபட்ட முன்னோடிகள் ஏராளமானோர் உள்ளனர். அந்த பட்டியலில் உள்ளவரின் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இன்று திருமண நிகழ்ச்சியுடன் காதணி விழாவையும் நடத்தியுள்ளனர்.
இந்த நாட்டில் காது குத்தக்கூடிய நிலையிலேயே சில அரசியல்வாதிகள் உள்ளனர். அதனால்தான் திருமண விழாவுடன் காதணி விழாவையும் நடத்தியுள்ளார்கள் என்று நம்புகிறேன், உணர்கிறேன்.
தமிழகத்தில் மக்களை பற்றி கவலைப்படாத கொடுமையான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அதே போல் மத்தியிலும் மக்களை பற்றி, நாட்டை பற்றி கவலைப்படாத ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசுக்கு துதிபாடக்கூடிய, அடிமையாக இருக்கக்கூடிய ஆட்சி தமிழ்நாட்டில் இருக்கிறது. நீட் தேர்வின் மூலம் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு கலைந்துள்ளது. விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தி.மு.க. தலைவர் கலைஞர் 5 முறை முதல்-அமைச்சராக இருந்த போது, ஆட்சியில் இல்லாத போது அண்டை மாநிலங்களுடன் நட்புறவுடன் இருந்து மத்திய அரசு காவிரி நீரை பெற்றுத்தர முடியாத நிலையிலும், நட்புணர்வு மூலம் கர்நாடகாவில் இருந்து ஓரளவு தண்ணீரை பெற்று தந்தார். ஆனால் இப்போது அந்த நிலை இல்லை.
ஆண்டுதோறும் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால் 7 வருடங்களில் ஒரு வருடம் கூட தண்ணீர் திறக்கவில்லை. ஜூன் 1-ந்தேதிக்குள் காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தர விட்டது. அதனை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் முழு மனதாக ஏற்றுக்கொண்டு அதற்குரிய உறுப்பினர்களை நியமித்து அறிவித்திருக்க வேண்டும். ஆனால் கர்நாடக அரசு இன்னும் அதனைகூட செய்யவில்லை.
ஆனால் அங்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள அம்மாநில முதல்வர் குமாரசாமி, காவிரி பிரச்சினையில் பாராளுமன்றத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார். உச்ச நீதிமன்றதீர்ப்பை மதிக்காமல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முன்வராத நிலையில் இருப்பது கண்டனத்துக்குரியது.
முதல்வர் ஆவதற்கு முன்பு அவர் ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு சென்றார். அப்போது அவர் தமிழகமும், கர்நாடகமும் சகோதரத்துவத்துடன் செயல்படும் என்றார். அவர் கூறியபடி செயல்படுகிறாரா? என்றால் இல்லை.
அவர் முதல்-அமைச்சராக தமிழக கடவுனின் கருணை தேவைப்படுகிறது. ஆனால் முதல்-அமைச்சர் ஆன பிறகு குமாரசாமியிடம் தமிழக மக்களை பற்றியும், தமிழகத்தின் ஜீவாதாரத்தை பற்றியும் கவலைப்படாத உணர்வு தான் இருந்து கொண்டிருக்கிறது.
இங்குள்ள அரசு நம் மக்களுக்கு ஆதரவாக செயல்படாமல் எதிராக செயல்படுகிறது. இதற்கு எல்லாம் முடிவு கட்ட விரைவில் தேர்தல் வர போகிறது. அதன் மூலம் தமிழகத்திற்கு விடிவு காலம் பிறக்கும். அதேபோல் மத்தியில் மத சார்பற்ற ஆட்சி அமைய அனைவரும் துணை நிற்க வேண்டும்.