தனிநபர்களுக்கு வழங்கும் ஊக்க மானியத்தை நிறுத்த மத்திய அரசு திட்டம்
எலெக்ட்ரிக் கார் வாங்கும் தனிநபர்களுக்கு வழங்கும் ஊக்க மானியத்தை நிறுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்குப் பதிலாக, ஓலா, உபேர் போன்ற நிறுவனங்கள் பயன்படுத்தும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தனிநபர்கள் வாங்கும் எலெக்ட்ரிக் வாகனங்களைவிட இத்தகைய கார்கள் அதிகம் இயக்கப்படுகின்றன என்ற அடிப்படையில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது ஃபேம் எனப்படும் திட்டத்தின் கீழ், எலெக்ட்ரிக் கார்கள் தயாரிப்பு-பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், ஒரு எலெக்ட்ரிக் காருக்கு 1 லட்சத்து 30ஆயிரம் ரூபாய் வரை விலையில் சலுகை வழங்கப்படுகிறது.
வரைவு நிலையில் உள்ள இரண்டாம் கட்ட ஃபேம் திட்டத்தில் இதை நிறுத்தும் முடிவை மத்திய அரசு முன்வைத்துள்ளது. மானிய ஊக்கத்தொகை அளிப்பதால், எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை பெரிய அளவிற்கு அதிகரிக்கவில்லை என்பதால் அரசு இத்தகைய முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.