பசுமை வழிச்சாலைக்கு எதிராக திருமாவளவன் ஆர்ப்பாட்டம்

Default Image

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளை எதிர்த்து அவர் கோ‌ஷம் எழுப்பினார்.

தூத்துக்குடியில் காவல் துறையால் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். ஐகோர்ட்டு நீதிபதி கண்காணிப்பில் விசாரணை நடைபெற வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் நீதிமன்றம் மூலம் திறக்க விடாதபடி நிரந்தரமாக மூட வேண்டும். இதற்காக சட்டம் இயற்ற வேண்டும். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடும், அரசு வேலை வாய்ப்பும் வழங்க வேண்டும். மேலும் கைது செய்யப்பட்ட பொதுமக்களை விடுதலை செய்ய வேண்டும்.

குண்டர் சட்டத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களை விடுவிக்க வேண்டும். பழிவாங்கும் முறையை அரசு கைவிட வேண்டும்.

வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய-மாநில அரசுகள் துணை போகக்கூடாது. பொதுமக்களை அச்சுறுத்தி பொய்வழக்கு போடக் கூடாது.

சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதனால் விளைநிலங்கள், குடியிருப்புகள் பாதிக்கப்படுகின்றன. பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்த பிறகே இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

ஆனால் ஆட்சியாளர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி நிலங்களை கையகப்படுத்தி வருகிறார்கள். இதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

ஏற்கனவே 4 வழிச்சாலை பயன்பாட்டில் உள்ளது. அதை மேலும் விரிவாக்கம் செய்து செயல்படுத்தலாம். மக்கள் நலன், நாட்டின் வளர்ச்சி என்று கூறி கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளின் வளர்ச்சிக்கு வித்திடுவதாக மக்கள் கருதுகிறார்கள்.

நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் மக்களை திசை திருப்பி இத்திட்டத்தை செயல்படுத்துவது சரியல்ல. இத்திட்டம் சேலத்தை மையமாக கொண்டு ஏன் செயல்படுத்தப்படுகிறது. சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை இந்த சாலையை அமைக்கலாமே. சேலத்துக்கு கொண்டுவருவதன் நோக்கம் என்ன?

தனியார் நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் இது போன்று அமைகின்ற பசுமை சாலைகளில் சுங்கச் சாவடிகள் அமைத்து அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். அரசு, தனியார், பொது மக்கள் ஆகியோர் சேர்ந்து செயல்படுத்தும் விதமாக 15 முதல் 20 ஆண்டுகள் வரை சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட கால அளவைவிட அதிகமாக வசூலித்து மோசடி செய்கிறார்கள்.

மக்கள் திட்டம் என்ற அடிப்படையில் சுங்கசாவடி அமைத்து தனியார் சம்பாதிக்க வழிவகுக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ஆளுர்ஷா நவாஸ், செல்லத்துரை, இரா.செல்வம், ராஜேந்திரன், இளங்கோ, கல்தூண் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காஞ்சி வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பல்லாவரம் பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தேவ அருள் பிரகாசம் தலைமை தாங்கினார். இதில் மண்டல செயலாளர் விடுதலை செழியன், சாமுவேல், பொற்செழியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்