தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..!
உயர்நீதிமன்ற மதுரை கிளை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்கும் அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு தடை விதிக்க மறுத்துள்ளது.
ஒருநபர் ஆணையத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கடந்த மாதம் 22-ஆம் தேதி நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலவரம், பொதுச் சொத்துகளுக்கு சேதம் என்பதால் துப்பாக்கிச் சூடு என்று அரசாணையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளதால் அந்த வரம்பை நோக்கியே விசாரணை அமையும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. விசாரணை தொடர்பாக அனைவரும் தகவல் தரலாம் என்பதற்குப் பதில் துப்பாக்கிச் சூட்டை நேரில் பார்த்த சாட்சிகள் மட்டும் தகவல் தரலாம் என்று கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிகள் பின்பற்றப்படவில்லை என்றும், விசாரணை ஆணையத்தை ரத்துசெய்யவும் கோரப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம், பஷீர் அகமது ஆகியோர் அரசுக்கு விசாரணை ஆணையம் அமைக்க அதிகாரம் உண்டு என்று கூறி விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர்.
எனினும் கலவரம், பொதுச் சொத்துகளுக்கு சேதம் என்பதால் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது குறித்து விசாரணைக்கு உத்தரவு என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதை மாற்ற முடியுமா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் புதன் கிழமைக்கு ஒத்திவைத்தனர்.