கவுரி லங்கேஷ் கொலையாளிகளின் மாதிரி வரைபடங்கள் வெளியீடு….!
பெங்களூருவை சேர்ந்த மூத்த பத்திரிகையாளரும் முற்போக்கு எழுத்தாளருமான கவுரி லங்கேஷ் (55), கடந்த மாதம் பெங்களூருவில் உள்ள தனது வீட்டின் வாசலில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு பலரும் அவருக்கு ஆதரவாக பேசவும் எழுதவும் தொடங்கினர் . இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதுவரை குற்றவாளிகள் யாரென்று கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் குற்றவாளிகளின் மாதிரி புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய சிறப்புப் புலனாய்வுக் குழு தலைமை அதிகாரி, பி.கே.சிங் கூறும்போது, ‘இந்த வழக்குத் தொடர்பாக சுமார் 200- 250 பேர்களிடம் விசாரணை நடத்தினோம். கடைசியாக குற்றவாளிகளை நெருங்கி உள்ளோம். இரண்டு பேர் மீது சந்தேகம் உள்ளது. மக்கள் கொடுத்த தகவல்களின் படி, கொலையாளிகள் இப்படித்தான் இருப்பார்கள் என்று சந்தேகத்தில் படங்கள் வரைந்துள்ளோம்’ என்றார். பின்னர் அந்த மாதிரி படங்களை வெளியிட்டனர்.