பொய் வழக்குகளை அரசு போட்டாலும் சட்ட வழியில் எதிர்கொள்வோம் :ப. சிதம்பரம்..!
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மத்திய மந்திரியாக இருந்தவர் ப.சிதம்பரம். இவரது மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் சொத்துகள் வாங்கியுள்ளதாகவும், இந்த சொத்துகள் வாங்கிய விவரங்களை நளினி சிதம்பரம் உள்பட 3 பேரும், தங்களது வருமான வரிக்கணக்கில் காட்டவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவரும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2015-ம் ஆண்டு கருப்பு பண தடுப்புச்சட்டத்தை கொண்டு வந்தார். இந்த சட்டத்தின் கீழ் நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் மீது வருமான வரித்துறை குற்றம் சாட்டி நோட்டீசு அனுப்பியது.
இதற்கு நளினி சிதம்பரம் உள்ளிட்டோர் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து, கொல்கத்தாவில் உள்ள சாரதா சிட்பண்ட் நிறுவனத்தின் மீது மத்திய அமலாக்கப்பிரிவு தொடர்ந்த மோசடி வழக்கில் ஆஜரான மூத்த வக்கீலான நளினி சிதம்பரம் அதற்கு ரூ.1 கோடி வக்கீல் கட்டணம் பெற்றார் என்று குற்றச்சாட்டு எழுந்தது.
கடந்த செப்டம்பரில் விசாரணைக்கு ஆஜராக அமலாக்க துறை அவருக்கு சம்மன் அனுப்பியது. இதற்கு ஐகோர்ட்டு விதித்த தடையை அடுத்து புதிய சம்மன் அனுப்பப்பட்டது. அதில் இன்று ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனை எதிர்த்து அவர் செய்த மேல்முறையீட்டு மனுவின் மீது ஐகோர்ட்டில் நடந்த விசாரணையில், வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. அதுவரை நளினி சிதம்பரம் விசாரணைக்கு ஆஜராக தேவையில்லை என்றும் நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், முன்னாள் மத்திய மந்திரியான ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், எத்தனை பொய் வழக்குகளை அரசு போட்டாலும் அவற்றை என்னுடைய குடும்பத்தினர் சட்ட வழியில் உறுதியோடு எதிர்கொள்வார்கள். சுதந்திரமான நீதிமன்றங்களே மக்களுக்குப் பெரும் பாதுகாப்பு என அதில் தெரிவித்துள்ளார்.