அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 7வது முறையாக நீட்டிப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை அக்.13ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதன்பின் 5 நாட்களுக்கு செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
இதையடுத்து, அமலாக்கத்துறை காவல் முடிந்து மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, மீண்டும் நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்து செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அந்த சமயத்தில், ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடலாம் என அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரிய வழக்கை யார் விசாரிப்பது என குழப்பம் நீடித்து வந்த நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமே விசாரிக்கும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதே வேளையில், செந்தில் பாலாஜியிடன் விசாரணை நடத்த அமலாக்கத்துறை தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அந்த சமயத்தில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலும் 6வது முறையாக நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், மீண்டும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை அக்.13ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், இன்று புழல் சிறையில் இருந்து காணொளி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜியின் காவல் மேலும் 14 நாட்கள் நீதிமன்ற என 7வது முறையாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.