ஏர் இந்தியா பங்குகளை விற்கும் முடிவை தற்காலிகமாக கைவிட்டது மத்திய அரசு..!
பெருகி வரும் நிர்வாக செலவுகள், லாபமற்ற வர்த்தக நடைமுறைகள் ஆகியவற்றால் சுமார் 52000 கோடி ரூபாய் கடன் நெருக்கடியில் ஏர் இந்தியா சிக்கியுள்ளது. இதனால், ஏர் இந்தியா நிறுவனத்தின் 76 சதவிகித பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்து தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவெடுத்தது.
இதற்கு, பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி வருபவர்கள் வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை வாங்க தகுதி வாய்ந்த நிறுவனங்கள் மே 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், பங்குகளை வாங்க எந்த நிறுவனமும் ஆர்வம் காட்டவில்லை.
இந்நிலையில், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல், விமான போக்குவரத்துத்துறை மந்திரி சுரேஷ் பிரபு, போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்கரி மற்றும் விமான போக்குவரத்துத் துறையின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்வதை தற்காலிகமாக கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யும் முன்னர் சில விதிமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டும். இவற்றை நிறைவேற்றிய பிறகே அடுத்த முறை ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்வது குறித்து முடிவு செய்யப்படும்.
அதற்குள், ஒரு லாபகரமான நிறுவனமாக ஏர் இந்தியாவை மாற்ற வேண்டும். இதற்காக, ஏர் இந்தியா நிறுவனத்தின் செயல்திறனை அதிகரிக்கும் முயற்சிகளில் கவனம் செலுத்தவும் அதற்கு தேவையான நிதியை ஒதுக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது என கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
செபி விதிமுறைகளின்படி, கடந்த மூன்று நிதி ஆண்டுகளாக லாபம் ஈட்டிய நிறுவனத்தை மட்டுமே பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டு அதன் பங்குகளை விற்பனை செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.