திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு..!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சனிக்கிழமை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இலவச தரிசன பக்தர்கள் செல்லும் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் அனைத்து காத்திருப்பு அறைகளும் நிரம்பி வழிந்தன. அதனையும் தாண்டி 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் காத்திருக்கின்றனர். இலவச தரிசனத்துக்கு 24 மணி நேரத்திற்கு மேலாகிறது.
ரூ.300 கட்டணத்தில் 5 மணி நேரத்திலும், நடை பாதை பக்தர்கள் 3 மணி நேரத்திலும் சாமி தரிசனம் செய்தனர்.
விரைவு தரிசனம், நடைபாதை தரிசனம் உள்ளிட்டவற்றில் டோக்கன் பெற்ற பக்தர்கள் 5 மணி நேரத்துக்குள் சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று முதல் இன்று காலை வரை 86 ஆயிரத்து 744 பேர் சாமி தரிசனம் செய்தனர். 36,455 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். நேற்று முன்தினம் 3.50 கோடியும் நேற்று 2 கோடியே 78 லட்சம் உண்டியல் வசூலானது. தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு தேவையாக அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருவதாக தேவஸ்தானம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருமலையில் பக்தர்கள் தங்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து புகார் அளிக்க 18004254141 என்ற டோல் ப்ரீ எண் மற்றும் 9399399399 என்ற தேவஸ்தானத்தின் வாட்ஸ்அப் எண் உள்ளிட்டவற்றை தொடர்பு கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் உடனுக்குடன் தீர்வு காண எப்.எம்.எஸ். என்ற ஹெல்ப் லைன் சேவையை தேவஸ்தானம் தொடங்கி உள்ளது. இங்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஊழியர்கள் பேசுவார்கள்.
சிறிய பிரச்சனைகளை ஊழியர்களும், பெரிய பிரச்சனைகளை அதிகாரிகளும் உடனுக்குடன் அறிந்து தீர்வு காண்பர். அதற்காக பக்தர்கள் 1800425111111 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.