ஈரோடு அருகே பவானி ஆற்றில் இரவு-பகலாக நடைபெறும் மணல் திருட்டு!
பவானி ஆற்றில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தண்ணீருக்குள் இறங்கி மணல் திருட்டு நடைபெறுவதாகவும், மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிந்தும் கண்டுகொள்வதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உருவாகும் பவானி ஆறு, ஈரோடு மாவட்டம் பவானி வரை சென்று திருவேனி சங்கமம் என்ற இடத்தில் காவிரி ஆற்றில் கலக்கிறது. பவானி சாகர் அணையில் இருந்து ஈரோடு மாவட்டத்தின் குடிநீர் தேவைக்காக தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடப்படுவதால், அதன் கரையோரப் பகுதிகள் பசுமையாகவே காட்சியளிக்கின்றன.
தோட்ட உரிமையாளர்களுக்கு சொற்ப தொகையை கொடுத்து, கைக்குள் போட்டுக் கொள்ளும் மணல் கொள்ளையர்கள், ஆற்றில் திருடும் மணலை இரவு நேரத்தில், அந்த தோட்டங்களின் வழியாக லாரிகளின் மூலம் கடத்துவதாக கூறப்படுகிறது. தண்ணீர் ஓடும் ஆற்றில் மணலை அள்ளுவதற்காக, கூலிக்கு 30 பேரை அமர்த்தியுள்ள மணல் கொள்ளையர்கள், மணல் திருட்டுக்கு, நாட்டுச் சர்க்கரை தயாரிக்கப் பயன்படும் கொப்பரைகளை பயன்படுத்துகின்றனர்.
சர்க்கரை கொப்பரைகளை பரிசல்போல் பயன்படுத்திச் செல்லும் இவர்கள், ஆற்றுக்குள் மூழ்கி, இரும்பு வாளிகள் மூலம் மணலை அள்ளி, கொப்பரைகளை நிரப்பி கரை சேர்க்கின்றனர்.
கொப்பரைகளில் நிரப்பிய மணலை கரைக்குக் கொண்டு சென்று, சல்லடையால் சலித்து வைக்கும் மணல் கொள்ளையர்கள், இரவு நேரத்தில் லாரிகளை வரவழைத்து, அள்ளிச் செல்வதாக கூறப்படுகிறது. அடசப்பாளையம் பவானி ஆற்றில் மட்டும் நாளொன்றுக்கு 200 யூனிட் வரை திருடப்படுவதாகவும், ஆற்றில் மூழ்கி மணல் அள்ளும் தொழிலாளர்களுக்கு, யூனிட் ஒன்றுக்கு 2 ஆயிரம் ரூபாய் வரை கூலித் தரப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இங்கிருந்து கடத்தப்படும் மணல் கோபி, கவுந்தபாடி ஆகிய பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு, ஒரு யூனிட் 15 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. மேலும், கள்ளிப்பாடி தண்ணீர் பந்தல் பகுதியில் திருட்டு மணல் குடோன் இயங்கிவருவதாகவும், தொடர்கதையாக உள்ள மணல் திருட்டு குறித்து தெரிந்தும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்தி