காவிரி விவகாரத்தில் எங்கள் கோரிக்கை ஒன்றே ஒன்றுதான்.! அமைச்சர் துரைமுருகன் பேட்டி.!

Tamilnadu Minister Duraimurugan

காவேரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என காவிரி ஒழுங்காற்று மையம் பரிந்துரை செய்து இருந்தது. அதனை தொடர்ந்து நடைபெற்ற உச்சநீதிமன்ற வழக்கிலும், காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி, வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கோரிய உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், இன்று டெல்லியில் காவிரி விவகாரம் தொடர்பாக காவிரி மேலாண்மை வாரியம் ஆலோசனை கூட்டம் பிற்பகல் 2 மணிக்கு நடைபெற உள்ளது.

இன்று நடைபெற உள்ள காவிரி மேலாண்மை வாரிய ஆலோசனை கூட்டம் பற்றி சென்னையில் செய்தியாளர்களுக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டியளித்தார். அவர் கூறுகையில், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று மையம் என எல்லாவற்றிலும் நங்கள் வைக்கும் கோரிக்கை ஒன்று தான்.  தமிழகத்திற்கு 12000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்பது தான் என்றார்.

தற்போது காவேரி ஒழுங்காற்று மையம் பரிந்துரையின் பெயரில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.  அது போதாது. குருவை சாகுபடி பயிர்கள் பல்வேறு இடங்களில் காயும் நிலை ஏற்பட்டுள்ளது. குருவை சாகுபடிக்கு போதிய அளவு தண்ணீர் இல்லை.

இதே தேதியில் சென்ற வருடம் 23.09.2022 நிலவரப்படி, தமிழகத்தில், கேஆர்எஸ் அணையில் 97.08 சதவீதம் தண்ணீர் இருந்தது. இப்போது 42 சதவீதம் தான் தண்ணீர் இருக்கிறது. கபினி அணையில் 95 சதவீதம் இருந்தது இப்போது 68 சதவீதம் தான் இருக்கிறது. ஹேமாவதி அணையில் 99 சதவீதம் இருந்த தண்ணீர், இப்போதைக்கு 49 சதவீதம் தான் தண்ணீர் இருப்பு இருக்கிறது. மேட்டூரில் கடந்த வருடம் 95 சதவீதம் இருந்த நீர் தற்போது 11.79 சதவீதம் தான் தண்ணீர் இருக்கிறது.

கர்நாடகா அணையில் நீர் இருக்கிறது. ஆனால் அதனை தமிழகத்திற்கு தர மறுக்கிறார்கள். ஒரு நதி நீர் பங்கீடானது நியாபடி நதியின் கடைசி கட்ட பயனாளிக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். காவிரியில் தண்ணீர் திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துவிட்டார். காவேரி மேலாண்மை வாரியம் கூறிவிட்டது. காவிரி ஒழுங்காற்று மையம் கூறிவிட்டது. உச்சநீதிமன்றம் கூறுகிறது. இவை எதையுமே கேட்காமல் அரசு இருக்கிறது.

கர்நாடக மக்கள் தமிழகத்தில் பலர் வாழ்கிறார்கள். தமிழக மக்கள் கர்நாடகாவில் பலர் வாழ்கிறார்கள். நித்தம் இரு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து செயல்பட்டு வருகிறது. அண்டை மாநிலங்கள் உடன் எப்போதும் நட்பும், பாசமும் கொண்டிருக்க வேண்டும். கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் எனக்கு நீண்ட கால அரசியல் நண்பர். சித்தராமையா நீண்ட கால அரசியல் அனுபவம் பெற்றவர். இன்றுவரை அவர்களுக்கான மரியாதையை நாங்கள் அளித்து வருகிறோம் என கூறினார்.

மேலும், நேற்று திரைப்பட விளம்பரத்திற்காக நடிகர் சித்தார்த்த பெங்களூரு சென்ற போது, கன்னட அமைப்பினரால்  பட நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டு நடிகர் சித்தார்த் வெளியேறினார். இதுகுறித்து செய்தியாளர்கள் அமைச்சர் துரைமுருகனிடம் கேட்டனர். அவர் கூறுகையில், இது தேவையில்லாத செயல். ஒரு மாநிலம் தனி நாடு போல செயல்பட முடியாது. இன்னோர் மாநிலத்தை சார்ந்து செயல்பட வேண்டிய நிலை தான் இருக்கிறது அதனை புரிந்து மாநில அரசுகள் செயல்பட வேண்டும் எனவும் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்