வாச்சாத்தி வழக்கு: மேல்முறையீடு மனுக்கள் தள்ளுபடி.. குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதி! ஐகோர்ட் தீர்ப்பு!

Vachathi case

வாச்சாத்தி மலை கிராம பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை தண்டனை விதித்து தருமபுரி முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தற்போது  சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதனால், வாச்சாத்தி கொடூரம் தொடர்பான குற்றவாளிகளின் மேல்முறையீடு மனுக்களை  சென்னை ஐகோர்ட் நீதிபதி வேல்முருகன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதுமட்டுமில்லாமல், வாச்சாத்தியில் பாலியல் கொடூரத்தால் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் எனவும் நீதிபதி ஆணையிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் இறந்து விட்டால் அவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் குற்றம் புரிந்தவர்களிடம் ரூ.5 லட்சம் வசூலிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். கடந்த 1992ல் தருமபுரி அருகே வாச்சாத்தி மலை கிராமத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். 

அதாவது, 1992 ஜூன் 20ம் தேதி வாச்சாத்தி மலை கிராமத்தில் வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தருமபுரி அருகே உள்ள வாச்சாத்தி மலை கிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கியதாக கூறி சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின்போது வாச்சாத்தி மலை கிராம பெண்கள் 18 பேரை அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.  பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரில் 1995ல் 269 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தியது.

சந்தனக்கட்டை சோதனை என்ற பெயரில் பெண்களிடம் காவல்துறை, வருவாய்த்துறை அத்துமீறி உள்ளனர். 2011ல் இந்த வழக்கில் 215 பேர் குற்றவாளிகள் என தருமபுரி முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி, குற்றாவளிகளுக்கு 2 முதல் 10 ஆண்டுகள் வரை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.  இதில், பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக 17 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானதாக நீதிபதி அறிவித்தார். இதையடுத்து இவ்வழக்கில் தொடர்புடைய 54 பேர் காலமான நிலையில், விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு விசாரணையை முடித்து ஐகோர்ட் நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார். அதில், வாச்சாத்தி வழக்கில் குற்றவாளிகளுக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.

வாச்சாத்தி பெண்கள் பாலியல் கொடூர வழக்கில் அனைத்து மேல்முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்து, குற்றவாளிகளுக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை  உறுதி செய்தார். அதன்படி, இவ்வழக்கில் 269 பேர் குற்றம் சாட்டப்பட்டவர்கள். தீர்ப்பு வரும் போது 54 பேர் உயிருடன் இல்லாததால் மீதி இருக்கும் 215 பேருக்கும் தருமபுரி நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

இதில், 12 பேருக்கு 10 ஆண்டு சிறை, 5 பேருக்கு 7 ஆண்டு சிறை, மற்றவர்களுக்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தற்போது ஐகோர்ட் நீதிபதி உறுதி செய்துள்ளார். மேலும், இவ்வழக்கில் குற்றவாளிகள் யாரேனும் ஜாமீனில் இருந்தால் அவர்களை கைது செய்ய கிருஷ்ணகிரி நீதிமன்றத்துக்கு உத்தரவு பிறப்பித்து, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு வேலை அல்லது சுய தொழிலுக்கு உதவி வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி கூறியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன் வாச்சாத்தி கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்