கர்நாடகத்துக்கு தமிழ்நாடு வாகனங்கள் செல்ல தடை.. எல்லை வரை மட்டுமே பேருந்து இயக்கம்!

TN VEHICLE

தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு உத்தரவை கண்டித்து நாளை கர்நாடகாவில் மாநில தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூருவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இன்று நள்ளிரவு முதல் நாளை நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா – தமிழ்நாடு இடையே காவிரி நதிநீர் பங்கீடு குறித்த பிரச்சனை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்து வருகிறது. எங்களுக்கே போதிய நீர் இல்லாததால் தண்ணீரை திறக்க முடியாது என கர்நாடக அரசு தெரிவித்து வருகிறது. இதனால், இரு மாநிலங்களும் சட்ட போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இதுதொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனிடையே, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று குழு, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கோரி உத்தரவிட்டும், கர்நாடக அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. இதனால், இரு மாநிலங்களிலும் விவசாயிகள் மற்றும் சில அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சூழலில், தமிழகத்திற்கு காவிரி நீர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் நாளை முழு பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட ஆதரவு அமைப்பினர் நாளை கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.  இந்த முழு அடைப்புக்கு பெரும்பாலான அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அசம்பாவித சம்பவங்களை தடுக்க, மாநிலம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த அம்மாநில காவல்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூருவில் இன்று இரவு முதல் நாளை இரவு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெற இருப்பதால், தமிழ்நாடு வாகனங்கள் கர்நாடக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்துக்கு சரக்கு வாகனங்கள், இதர வாகனங்கள் செல்ல வேண்டாம் என காவல்துறை அறிவித்துள்ளது. குறிப்பாக, கர்நாடக மாநில எல்லையான புளிஞ்சூர், கோலிபாளையம் வழியாக தமிழக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி செல்வோர் திம்பம் தலமலை வழியாக வாகனங்கள் சென்று வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுவும் இவ்வழியில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கர்நாடக மாநிலம் செல்லும் தமிழக பேருந்துகள் நாளை தமிழகம் எல்லை வரை மட்டுமே இயக்கப்படும் மற்றும் பெங்களூரு செல்லும் பேருந்துகளை தமிழக எல்லையான அத்திப்பள்ளி வரை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இரு மாநில எல்லைகளில் நிலவும்  சூழலை கருத்தில் கொண்டு பேருந்து சேவை இருக்கும் எனவும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்