ஆண்டுக்கு இரண்டரை லட்சம் அரசு வேலை வழங்க! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

Anbumani Ramadoss

சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றோருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 10,205 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். தேர்ச்சி பெற்ற 10,205 பேர் பல்வேறு அரசுத்துறைகளில் இளநிலை பணியாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன்பின் பேசிய முதலமைச்சர், அரசு பணிக்கு தேர்வாகி இருப்பவர்களுக்கு மக்கள் சேவை ஒன்றுதான் லட்சியமாக இருக்க வேண்டும்.

அரசு வேலைக்கு உள்ள மதிப்பு ஒருபோதும் குறையாது. அரசு வேலை கிடைத்தால் அது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் பலன் அளிக்கும். எப்படியாவது அரசு பணி வாங்கிவிட வேண்டும் என்று இளைஞர்களின் கனவாக இருக்கிறது. நடப்பாண்டில் மேலும் 17,000 பேர் அரசுப் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். அடுத்த இரு ஆண்டுகளில் புதிதாக 50,000 பேர் அரசு பணியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஆண்டுக்கு இரண்டரை லட்சம் அரசு வேலை வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், நடப்பு நிதியாண்டியில் குறைந்தது ஒன்றை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அடுத்த 2 ஆண்டுகளில் 4 லட்சம் பேருக்கு அரசு பணி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில் 22,781 பேருக்கு அரசு பணி என்பது சாதனையல்ல எனவும் விமர்சித்துள்ளார்.

அடுத்த 2 ஆண்டுகளில் வழங்கப்பட உள்ளதாக கூறப்படும் தமிழ்நாடு அரசு வேலைகளின் எண்ணிக்கையும் போதுமானவை அல்ல. தமிழ்நாட்டில் இரண்டரை ஆண்டுகளில் 50,000க்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஓய்வுபெற்றுள்ளனர். ஆனால், ஓய்வுபெற்றவர்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் குறைவாக 22,781 பேருக்கு மட்டுமே  அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து அரசு துறைகளிலும் சேர்த்து 4 லட்சத்துக்கும் கூடுதலான பணியிடங்கள் காலியாக உள்ளன.

மேலும், தமிழ்நாட்டுக்கு இளைஞர்களின் கனவை நனவாக்கும் கடமை, பொறுப்பு அரசுக்கு உண்டு, அதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். எனவே, நடப்பு நிதியாண்டில் குறைந்தது ஒன்றரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும். அடுத்த 2 ஆண்டுகளில் ஆண்டுக்கு தலா 2 லட்சம் வீதம் 4 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை தேவை எனவும் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்