2வது நாளாக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்!
நாடு முழுவதும் அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் டீசல் விலை உயர்வு, சுங்கக் கட்டண உயர்வு, லாரிகளுக்கான காப்பீட்டுத் தொகை உயர்வு ஆகியவற்றை குறைக்க வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டம் இன்று 2வது நாளாக நீடிக்கும் நிலையில், தமிழகத்தில் மட்டும் 3 லட்சம் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு மினி லாரி, சரக்கு வேன் மற்றும் பால் கொண்டு செல்லும் வாகனங்களும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், தங்களது போராட்டம் மேலும் தீவிரமடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால், சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கு வழக்கமாக வரும் 350 லாரிகளில், இன்று 250 லாரிகள் மட்டுமே வந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
வரத்துக் குறைந்ததால், நேற்று 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பீன்ஸ், இன்று 80 ரூபாய்க்கும், நேற்று 25 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ பச்சை மிளகாய், இன்று 70 ரூபாய்க்கும், ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி, வெங்காயம் ஆகியவை, இன்று 30 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. இதேபோல், மேலும் சில காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.