வாடிக்கையாளர் வங்கிக் கணக்கில் இருந்து பல லட்சம் திருடிய துணை-மேலாளர் கைது!
வாடிக்கையாளர் வங்கிக் கணக்கில் இருந்து சென்னை திருவொற்றியூர் அருகே 5, 13, 000 ரூபாயை திருடியதாக வங்கி துணை மேலாளர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
விச்சூரை சேர்ந்த விவசாயி ரவீந்திரநாத் கடந்த ஆண்டு மணலி புது நகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு தொடங்கியுள்ளார். தனது வருமானத்தை அந்த கணக்கில் சேமித்து வந்த ரவீந்திர நாத், பணம் எடுப்பதற்கு வங்கிக்கு சென்றார். ஆனால் அவருடைய கணக்கில் கடந்த மே மாதத்தில் ஆறு முறை மொத்தம் 5, 13, 000 ரூபாய் எடுத்ததாக பதிவாகி இருந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த ரவீந்திர நாத் வங்கி மேலாளரிடம் இதுகுறித்து புகார் தெரிவித்தார்.
அதற்கு வங்கி மேலாளர் உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து ரவீந்திர நாத், மணலி புதுநகர் காவல் நிலையத்தில் கடந்த 13ம் தேதி புகார் அளித்தார். இதை தொடர்ந்து, வங்கி மேலாளரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், துணை மேலாளர் சிகாமணி மற்றும் உதவியாளர் சுரேஷ் ஆகியோர் பணத்தை கையாடல் செய்தது தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து வங்கி ஊழியர்களிடம் இதுபோல வேறு எதாவது கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளனவா, இந்த கொள்ளையில் வேறு யாருக்காவது தொடர்பிருக்கிறதா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.