தமிழகத்தில் திமுக இல்லாமல் காங்கிரஸால் வாழ முடியாது.! மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்!
தமிழகத்துக்கும், கர்நாடக மாநிலத்துக்கும் இடையே காவிரி நதி நீர் தொடர்பான பிரச்சினை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. காவிரியில் இருந்து உரிய அளவிலான தண்ணீரை தரவில்லை என தமிழக அரசும், போதிய அளவு தண்ணீர் இல்லை, இதனால் தர இயலாது என கர்நாடக அரசும் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பான பிரச்சனை காவிரி ஒழுங்காற்று மையம், காவிரி மேலாண்மை வாரியம், உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது.
சமீபத்தில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 5000 கன அடி தண்ணீரை தமிழகத்திற்கு திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்று மையம், காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு, இதனை எதிர்த்த மனுக்களை தள்ளுபடி செய்தது. இருப்பினும், காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட்ட பாடு இல்லை. இதனால், இரு மாநிலங்களிடையே பிரச்சனை நீண்டு கொண்டே இருக்கிறது.
ஒரு பக்கம் கர்நாடகத்தில் திமுக கூட்டணி வகிக்கும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தும் தண்ணீர் பெற்று தர முடியவில்லை எனவும் குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்த காவிரி விவகாரம் தொடர்பாக முறையாக விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என டெல்டா மாவட்ட விவசாயிகள் அவ்வப்போது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதுபோன்று, தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கூடாது என்று கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம், மனித சங்கிலி உள்ளிட்ட பல்வேறு போராட்டங்ளை விவசாயிகள் முன்னெடுத்துள்ளன.
இந்த நிலையில், காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில், எந்த கட்சியையும் கலந்தாலோசிக்காமல் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தலைமையிலான அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டதாக நான் முன்பே கூறியுள்ளேன். இதில் அனைத்துக் கட்சி ஆலோசனையும் இல்லை. திமுகவினரின் அழுத்தத்தால் விவசாயிகளிடம் கருத்து கேட்கவில்லை.
தமிழ்நாட்டில் திமுக இல்லாமல் காங்கிரஸ் வாழ முடியாது என்பது உங்களுக்கு தெரியும், திமுக மற்றும் இந்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அழுத்தங்களுக்கு கர்நாடக காங்கிரஸ் அடிபணிந்தது. எனவே, விவசாயிகளின் உரிமைகள், கர்நாடக குடிமக்களின் உரிமைகள் ஆகியவற்றில் நாங்கள் உறுதியாக நிற்போம். கர்நாடகாவின் மக்களின் உரிமைகள், அவர்கள் நலனுக்கு எதிராக எந்த ஒரு கூட்டணி அரசியலையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்ர்சிக் கூட்டத்துக்கு அம்மாநில முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்திருந்தார். இதில், மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கலந்து கொண்டார். இதற்கு முன்னர் தமிழ்நாட்டுக்கு கர்நாடகா தண்ணீர் திறந்து விட்டபோது கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தவர் இவர். மேலும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி ஆலோசிக்காமல் கர்நாடக காங்கிரஸ் அரசுதமிழகத்துக்கு 10 டி.எம்.சி., நீரை காவிரியில் இருந்து திறந்து விட்டதாக கடும் எதிர்ப்பும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.