ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 75,000 டன் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா அனுமதி.!
கடந்த ஜூலை 20ம் தேதி முதல் உள்நாட்டுச் சந்தையில் விலை உயர்வைக் கட்டுக்குள் வைக்கவும், உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது. இந்த அறிவிப்பானை வெளியாவதற்கு முன்பு ஏற்றுமதிக்காக, கப்பல்களில் ஏற்றப்பட்ட சரக்குகளுக்கு தடை பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, பாசுமதி அல்லாத வேகவைத்த அரிசி மற்றும் பாசுமதி அரிசி ஆகியவற்றின் ஏற்றுமதி கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று உணவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்தது. தொடர்ந்து, பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்க இந்தியாவை ஊக்குவிப்பதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) கூறியது.
இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 75,000 டன்களுக்கு பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கான ஏற்றுமதிகள் தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட் மூலம் அனுமதிக்கப்படுகிறது என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
மேலும், ஏற்றுமதிக் கொள்கையில் திருத்தம் செய்யும்போது, மற்ற நாடுகளுக்கு உணவுப் பாதுகாப்பைப் பூர்த்தி செய்ய அரசாங்கம் வழங்கும் அனுமதியின் அடிப்படையில் ஏற்றுமதி அனுமதிக்கப்படும் என்றும் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய அரசு, உடைந்த அரிசியை ஏற்றுமதி செய்வதைத் தடைசெய்தது. நெல் பயிரின் கீழ் பரப்பளவு வீழ்ச்சியடைந்ததால் உற்பத்தி குறைவாக இருக்கும் என்ற கவலையின் மத்தியில், பாசுமதி அல்லாத அரிசியின் ஏற்றுமதிக்கு 20 சதவீத வரி விதித்தது. இதன்பிறகு, நவம்பர் மாதம் இந்த தடையை நீக்கியது குறிப்பிடத்தக்கது.