ஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தம் நீட்டிப்பு : இந்தியா வரவேற்பு..!

Default Image

ஆப்கானிஸ்தானில் ரம்ஜான் நோன்பு காலத்தையொட்டி, அதிபர் அஷரப் கனி போர் நிறுத்தம் அறிவித்தார். தலிபான்கள் வன் முறையை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதனை தலிபான்கள் ஏற்றுக்கொண்டனர். கடந்த 17 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுப் போரில், முதல் முறையாக தலிபான்கள் 3 நாள் போர் நிறுத்தம் அறிவித்தனர்.

அந்த 3 நாட்களிலும் போர் நிறுத்தத்தை அவர்கள் மீறவில்லை. அதுமட்டுமின்றி, ரம்ஜான் பண்டிகையையொட்டி ஆப்கானிஸ்தான் படையினரும், தலிபான்களும் ஒருவரையொருவர் கட்டித்தழுவி வாழ்த்து கூறினர். பொது மக்களுடனும் தலிபான்கள் ‘செல்பி’ படங்கள் எடுத்து, அது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. ஆப்கானிஸ்தான் மக்களிடையே இந்த போர் நிறுத்தம் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இதனால் திருப்தி அடைந்த அதிபர் அஷ்ரப் கனி, போர் நிறுத்தத்தை மேலும் 9 நாட்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்தார். தலிபான்களுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு பற்றி உடனடியாக தலிபான்கள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. எனினும், சமாதானத்தை தலிபான்கள் விரும்பும்பட்சத்தில் பேச்சுவார்த்தைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தானின் இந்த போர்நிறுத்த நீட்டிப்பு அறிவிப்பை இந்தியா வரவேற்றுள்ளது. ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதம் மற்றும் வன்முறை இல்லா சூழ்நிலையில் அமைதி மற்றும் சமரச நடைமுறைகளுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என்று இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

‘ஆப்கானிஸ்தான் அதிபர் கனி போர் நிறுத்தத்தை நீட்டிப்பு செய்திருப்பதை வரவேற்கிறோம். ஆயுதக்குழுக்களும் அவற்றின் ஆதரவாளர்களும் பயங்கரவாத வன்முறையை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வருவதற்கு இந்த போர்நிறுத்த நீட்டிப்பு வழிவகுக்கும் என நம்புகிறோம்’ என்றும் அவர் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்