காஷ்மீரில் சண்டைநிறுத்தம் நீட்டிப்பு இல்லை :
காஷ்மீர் மாநிலத்தில் சண்டைநிறுத்தம் நீட்டிப்பு இல்லை என்றும், தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் எனவும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ரம்ஜான் மாதத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்த முடிவெடுத்ததற்கு, காஷ்மீர் மக்கள் மீதான அன்பும், அக்கறையுமே காரணம் என்று குறிப்பிட்டார். ரம்ஜான் நேன்பை அமைதியாக கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக அமைதியான சூழல் உருவாக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை உடனடியாகத் தொடர பாதுகாப்புப்படையினருக்கு உத்தரவு பிறப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது
சண்டைநிறுத்த காலத்தில் தீவிரவாதிகள் 60க்கும் மேற்பட்ட தீவிரவாத செயல்களை அரங்கேற்றி உள்ளனர். எல்லைப் பகுதியில் வீரர்களுடன் சண்டையில் ஈடுபட்ட 24 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சண்டைகளில் பாதுகாப்புப் படையினர் 9 பேர் உயிரிழந்தனர். பொதுமக்கள் 6 பேரும் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர்..
இதனிடையே, லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த 35 தீவிரவாதிகள் பூஞ்ச், ஜம்மு மற்றும் நவ்காம் பகுதிகளில் ஊடுருவத் தயாராக இருப்பதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. இந்த மாதம் 450 தீவிரவாதிகள் ஊடுருவத் தயார் நிலையில் இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது. போர்நிறுத்தத்தை பயன்படுத்தி தீவிரவாதிகள் தங்கள் பலத்தை பெருக்கிக் கொண்டுள்ளதால், பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.