சமூக வலைத்தளம் மூலம் அரசு தொடக்கப் பள்ளியை மீட்டெடுத்த கிராம மக்கள்!
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே தனியார் பள்ளிகள் மீதான மோகத்தால் மாணவர் சேர்க்கை இன்றி அழிவின் விளிம்பிற்க்கு தள்ளப்பட்ட அரசு தொடக்கப் பள்ளியை வாட்ஸ் ஆப் குரூப் மூலம் இளைஞர்கள் மீட்டெடுத்த நிகழ்வு நிகழ்ந்துள்ளது.
சீதபற்பநல்லூரை அடுத்த கருவநல்லூரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் வெறும் 6 மாணவர்கள் மட்டுமே பயின்று வந்தனர். தனியார் பள்ளிகள் மீதான மோகத்தால் இந்தப் பள்ளியில் படித்து வந்த மாணவர்களின் எண்ணிக்கை ஒரே அடியாக குறைந்தது. 40 ஆண்டுகாலமாக செயல்பட்டு வரும் இப்பள்ளி மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டதை அறிந்த இளைஞர்களும், ஊர்மக்களும் பள்ளியை மீட்டெடுக்க போராடினர். முதற்கட்டமாக தனியார் பள்ளியில் பிள்ளைகளை சேர்க்க நினைக்கும் பெற்றோர்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதன் காரணமாக 6ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை 45ஆக அதிகரித்தது. அடுத்தபடியாக சமூக வலைத்தளங்கள் மூலம் சக நண்பர்களிடம் உதவியை நாடினர். அரசுப் பள்ளிகளை மீட்டெடுப்போம் என்ற பெயரில் வாட்ஸ் ஆப்பில் குழு ஏற்படுத்தப்பட்டது. இதன் பலனாக பல்வேறு நாடுகள் மற்றும் மாவட்டங்களில் இருந்தும் பண உதவி கிடைக்க தொடங்கியது. இதை அடுத்து ஆங்கில மொழியை பயிற்றுவிக்க மாதம் ஐந்தாயிரம் ரூபாய் ஊதியத்தில் ஆசிரியர் நியமிக்கப்பட்டார். மேலும் வெட்டுவான்குளம், வேளான்குளம், முத்தன்குளம், சீதபற்பநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து மாணவர்களை அழைத்து வருவதற்காக வாகன வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளியை காப்பாற்றுவதற்கான போராட்டத்தில் அரசு அதிகாரிகளும் முழு ஒத்துழைப்பு வழங்கியதாக பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். அடுத்த ஆண்டில் தனியார் பள்ளிக்கு சவால் விடும் அளவில் பள்ளியின் தரம் உயர்த்தப்படும் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். அரசுப் பள்ளியை மீட்டெடுத்த இவர்களது முயற்சிக்கு பாராட்டு குவிகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.