சென்னையில் ‘2020-ம் ஆண்டு நிலத்தடி நீர் வற்றி விடும்’!ஜி.கே.வாசன்

Default Image

தமாகா தலைவர் ஜி.கே. வாசன் ,வரும் 2020-ம் ஆண்டில் சென்னையில் நிலத்தடி நீர் இல்லாத நிலை ஏற்படும் என்று நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை தருகிறது, தண்ணீரை பாதுகாக்க தமிழக அரசு முன்கூட்டியே தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது ‘‘நீர் நிலைகளை பராமரிக்கவும், நீர் ஆதாரத்தை சேமிக்கவும், விவசாயம் உட்பட அனைத்து தொழிலுக்கும் தண்ணீரின் அவசியத்தையும், குடிநீருக்காக தண்ணீரை சுத்தமாக வைத்துக்கொள்வதற்கும், தேவைக்கேற்ப அளவான தண்ணீரைப் பயன்படுத்தவும், தண்ணீரை சேமிக்க வேண்டிய வழி முறைகளையும் விழிப்புணர்வு மூலம் ஏற்படுத்தி தமிழகத்துக்கு தேவையான தண்ணீர் ஆண்டுமுழுவதும் தட்டுப்பாடில்லாமல், தடங்கல் இல்லாமல் கிடைப்பதற்கு ஆளும் ஆட்சியாளர்கள் தொடர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்

நீரின்றி அமையாது உலகு என்பது நீரின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. நீர் இல்லாமல் இவ்வுலகில் வாழ முடியாது. இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் குழு கூட்டத்தில் வெளியிடப்பட்ட நீர் மேலாண்மை தொடர்பான ஆய்வறிக்கையில் வரும் 2020 ஆம் ஆண்டில் சென்னையில் நிலத்தடி நீர் இல்லாத நிலை ஏற்படும் என்றும் 2020 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நிலத்தடி நீர் முழுவதுமாக வற்றிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மிகவும் அதிர்ச்சிக்குரியது. காரணம் நிலத்தடி நீர் வற்றிவிட்டால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு, விவசாயத் தொழிலும் செய்ய முடியாமல், மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டு, அனைத்துவிதமான தொழில்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். மேலும் அந்த ஆய்வறிக்கையில் வருகின்ற 2030 ஆம் ஆண்டில் நம் நாட்டின் தண்ணீர் தேவை இரண்டு மடங்கு அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. தற்போதுள்ள நிலையே நீடித்தால் நம் நாடு மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கும். அதே போல தூய்மையான குடிநீர் கிடைக்காமல் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 2 லட்சம் பேர் உயிரிழந்து வருவதாகவும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனிதர்கள், விலங்குகள், பறவைகள் போன்ற பல்வேறு உயிரினங்கள் உயிர் வாழ அவசியம் தேவை தண்ணீர். குறிப்பாக விவசாயம் செய்வதற்கும், மக்களின் குடிநீருக்கும் அன்றாட, அவசியத் தேவையாக தண்ணீர் இருக்கிறது.

அப்படி இருக்கும் போது நீர் ஆதாரத்தை பாதுகாக்க வேண்டிய தொடர் நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் ஆறுகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஓடைகள், நதிகள், அணைகள் போன்ற நீர் நிலைப்பகுதிகளை முறையாக தூர்வாராமல், ஆழப்படுத்தாமல், கரை அமைக்காமல், பராமரிக்காமல், பாதுகாக்காமால் இருந்ததோடு மழைக்காலங்களில் சேமிக்க வேண்டிய தண்ணீரை முழுமையாக சேமிக்கவில்லை.

வீடுகள் உள்ளிட்ட பிற கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்புக்காக அரசின் திட்டங்களை முறையாக, முழுமையாக பின்பற்ற அரசு தவறிவிட்டது. இந்த நிலையே நீடித்தால் வரும் காலங்களில் நாடு முழுவதற்குமான தண்ணீர் தேவைக்கேற்ப கிடைக்காமல் விவசாயம் உட்பட பல்வேறு தொழில்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவதோடு, மக்களின் குடிநீருக்கும் பெருந்தட்டுப்பாடு ஏற்பட்டு, அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.

இதனையெல்லாம் மத்திய மாநில அரசுகள் மிக முக்கிய கவனத்தில் கொண்டு அதற்கேற்ப நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும். குறிப்பாக தமிழக அரசு உடனடியாக மாநிலம் முழுவதும் உள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஓடைகள், நதிகள், அணைகள் என எந்த நீர் நிலைகளாக இருந்தாலும் அனைத்தையும் பராமரிக்கவும், நீர் ஆதாரத்தை சேமிக்கவும் அனைத்து முயற்சிகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். தண்ணீர் கிடைப்பதற்கு மரங்களே முக்கிய காரணமாக இருப்பதால் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை.

மேலும் பொது மக்களிடம் விவசாயம் உட்பட அனைத்து தொழிலுக்கும் தண்ணீரின் அவசியத்தையும், குடிநீருக்காக தண்ணீரை சுத்தமாக வைத்துக்கொள்வதற்கும், தேவைக்கேற்ப அளவான தண்ணீரைப் பயன்படுத்தவும், தண்ணீரை சேமிக்க வேண்டிய வழி முறைகளையும் விழிப்புணர்வு மூலம் ஏற்படுத்தி தமிழகத்துக்கு தேவையான தண்ணீர் ஆண்டுமுழுவதும் தட்டுப்பாடில்லாமல், தடங்கல் இல்லாமல் கிடைப்பதற்கு ஆளும் ஆட்சியாளர்கள் தொடர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’’ என ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்