தனிமையை அதிகமாக விரும்ப த்ரிஷா கூறிய காரணம்..!
திரிஷா சினிமாவுக்கு வந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன. இப்போதும் அரை டஜன் படங்கள் கைவசம் வைத்து ‘பிசி’யாக நடித்து வருகிறார். மூன்று படங்கள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளன. அதில் மோகினி என்ற பேய் படமும் அடக்கம். இந்த படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என்று தெரிகிறது.
பழகும் நண்பர்கள், மன அழுத்தம் தீர்க்கும் வழிமுறைகள் போன்றவை குறித்து திரிஷா அளித்த பேட்டி வருமாறு:-
“வாழ்க்கையில் தினமும் நிறைய பேரை சந்திக்கிறோம். என் எதிரில் வரும் பலர் கையை தூக்கி ‘ஹாய்’ சொல்லி விட்டு செல்கிறார்கள். அவர்களில் சிலருடன் பேச வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அதில் கொஞ்சம் பேர் நண்பர்களாக மாறி விடுவார்கள். எப்படிப்பட்ட நண்பர்களாக இருந்தாலும் சொந்த விஷயங்கள் எல்லாவற்றையும் அவர்களுடன் பகிர்ந்து விட முடியாது.
அதனால் தினமும் ஒரு தடவையாவது நமக்கு நாமே ‘ஹலோ’ சொல்லிக் கொள்ள வேண்டும். நமக்கு நாம்தான் நண்பன். ஒவ்வொருவரும் தங்களை ஆத்ம பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். எனக்கு மன அழுத்தம் ஏற்படும்போது தனிமையைத்தான் விரும்புவேன். தனக்குத்தானே ஆத்ம பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
மனஅழுத்தம் வரும்போது தனிமையில் இருந்து எதற்காக பிரச்சினை வந்தது என்று எனக்குள்ளேயே கேட்டு என்னை பரிசோதனை செய்து கொள்வேன். நல்ல குடும்பம், நண்பர்கள் இருக்கலாம். ஆனால் எனக்கு நானேதான் துணை.”
இவ்வாறு திரிஷா கூறினார்.