‘இந்து பயங்கரவாதம்’ என பேசியது கிடையாது ‘சங்கி பயங்கரவாதம்’ என்றுதான் பேசினேன் -திக்விஜய் சிங் பதிலடி..!
மத்திய பிரதேச மாநிலத்தில் யாத்திரை மேற்கொள்ளும் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்து பேசுகையில், நான் இந்து பயங்கரவாதம் என பேசியிருக்கிறேன் என்று நீங்கள் தவறான தகவலை கொண்டுள்ளீர்கள். ‘சங்கி பயங்கரவாதம்’’ என்று பேசியிருக்கிறேனே தவிர ‘இந்து பயங்கரவாதம்’ என்று பேசியது கிடையாது. பயங்கரவாத செயல்பாடுகளுக்கு மதத்தின் அடிப்படையில் விளக்கவுரை வழங்க முடியாது. எந்தஒரு மதமும் பயங்கரவாத செயல்பாட்டிற்கு ஆதரவளிக்க முடியாது என கூறியுள்ளார்.
சங்கி பயங்கரவாதம் என்பதில் தன்னுடைய நிலைப்பாட்டை ஸ்திரமாக ஆதரிக்கும் முன்னாள் மத்திய பிரதேச முதல்-மந்திரி திக்விஜய் சிங், “சங் சித்தாந்தம் கொண்டவர்களால் பயங்கரவாத தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு உள்ளது. அது மாலேகான் குண்டு வெடிப்பு, மெக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு, சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் தாக்குதல்களாக இருக்கலாம். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வன்முறை பிரசாரத்தை முன்னெடுக்கிறது. வன்முறை, வெறுப்புணர்வு மற்றும் பயங்கரவாதத்தை பரப்புகிறது என்று கூறிஉள்ளார்.
பா.ஜனதா எம்.பி. சஞ்சய் பதாக் பேசுகையில், “ஒருவருடைய மதம் எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம், அவர் அதனை பின்பற்றுகிறார் என்றால், எந்தஒரு தவறையும் செய்ய மாட்டார். எந்தஒரு மதமும் பயங்கரவாதத்தை பரப்பவில்லை. பயங்கரவாதத்தை கொண்டுவந்து அதனுடன் மதத்தை தவறாக சித்தரிக்கும்போது அது குழப்பத்திற்கு வழிவகை செய்யும், மக்களை தவறான பாதைக்கு இழுத்துச் செல்லும். முதலில் இந்தியாவில் வாழும் மக்களை இந்துக்கள் என்றழைக்க வேண்டும். இந்து என்பதற்கு ஒவ்வொருவருக்கும் தனியான வரையறையிருக்கலாம், என்னை பொறுத்தவரையில், இந்தியாவில் உள்ள அனைவரும் இந்துக்கள்தான், அவர்களுடைய மதம் அல்லது ஜாதி எதுவாக இருந்தாலும் சரி இந்தியாவில் உள்ள அனைவருமே இந்துக்கள்தான்,” என கூறியுள்ளார்.